இராணுவ ஒடுக்குமுறைக் கோரத்தின் வெளிப்பாடே பல்கலைக்கழக சம்பவம் நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன் அறிக்கை

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக – அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது” எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், “பல்கலைக்கழகப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு;

“இப்போது இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி. யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்டது. மாணவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இணைந்தே இதனை அமைத்தார்கள். இதனை நிர்மூலமாக்க வேண்டும் என்ற அரசின் உயர் தரப்பினரின் அழுத்தங்களையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், இராணுவப் பாதுகாப்புடன் இதனை அகற்றியிருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதான படுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் மிகவும் ஆபத்தான வேலைத் திட்டங்களில்  இதுவும் ஒன்று. இது போன்ற பல திட்டங்கள் இந்த அரசிடம் இருப்பதாகத் தெரிகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் தமது உணர்வுகளின் வெளிப்பாடாக, தமது அன்புக்குரிய உறவுகளை நினைவுகூர்வதற்காக அமைத்த நினைவுத் தூபியை ஒரே இரவில் அராஜகமாகத் தகர்த்தெறிவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி நசுக்குவதற்கு ஒப்பானது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிட முடியாது. இது இராணுவ ஒடுக்குமுறைக் கோரத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது. அத்துடன் எம்மவரின் பயத்தின் உச்சகட்டமாகவும் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம், அதிரப்படையினரைக் குவித்து துப்பாக்கி முனையில் மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்திப் பணியவைப்பதானது இராணுவ அடக்குமுறையின் அசிங்க முகத்தையே வெளிப்படுத்துகின்றது. இந்தப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும். இப்பொழுது இங்கு நடப்பது வெகுவிரைவில் சிங்களப் பகுதிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் நடைபெறப் போகின்றது என்பதை எமது சிங்கள சகோதர சகோதரிகள் உணர்வார்களாக!

அதேவேளை, இந்த நினைவுத் தூபி இடிப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் நடந்து கொண்ட முறைமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று காரணம் கூற முடியாது. ஒரு தவறான காரியத்தை செய்யுமாறு  மேலிடத்து உத்தரவு வருமானால், அதனை செய்வதில் உள்ள பிழை அல்லது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி புரிய வைப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இது இந்த விடயத்தில் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது எனக்கு தெரியாது.  எது எப்படி இருந்தாலும், இதுவரை காலமும் இந்த நினைவுத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் முன்னைய இரண்டு நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.”