ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் மீதும் உணர்வுகள் மீதும்    ஏவி விடப்படும் அடக்கு முறைகள் இந்த நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், நீதித்துறை, ஊடகத்துறை மீதான  ஜனநாயகத்தை படுகொலை செய்வதாக அமைந்துள்ளது.

இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் ஒன்று செயற்பட்டு குரல் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்,

“பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயற்படும் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளையும் அதனை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள்,ஊடக நிறுவனங்களை அடக்கி ஆள நினைக்கும் பேரினவாத செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் நடைபெறும் பண்ணையாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் விசாரணை செய்யப்பட்டமை, மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றமை, மட்டக்களப்பு ஊடகவியலாளர் கோகிலதாசன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை, யாழ் ஊடக நிறுவனம் ஒன்றின் மீது பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை, முஸ்லீம் சமூகத்தின்  ஜனாசா எரிப்புக்கு எதிரான கருத்துக்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் என தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியும் இடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவங்களுக்கு எதிரான போராட்டங்களையும் அதனை செய்திகளாக்கும் ஊடகவியலாளர்கள் மீதான கைதுகள்,விசாரணைகள், மற்றும் மறைமுக அழுத்தங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்படும் சமூகங்களின் உண்மைகள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை ஆகும் எனவே சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஜனநாயக படுகொலைகளை கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக  ஒன்று திரண்டு ஓரணியில் செயற்படும் மக்களுடன் மக்களாக ஊடகவியலாளர்களாகிய நாம் பக்க பலமாக நிற்போம் என உறுதி கூறுகின்றோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’” என்று கூறப்பட்டுள்ளது.