இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது -லீலாதேவி ஆனந்தநடராஜா வலியுறுத்தல்

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில்  கிளிநொச்சியில் இடம்பெற்ற கூடகவியலாளர் சந்திப்பிலேயே அவ்வமைப்பின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா  இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் வடக்கு,கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், மார்ச் 2021 கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவு படுத்த விரும்புகின்றோம்.

அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசானது தாங்களாகவே முன்வந்து இணை அனுசரணை வழங்கிய தீர்மானம் உட்பட ஐ.நா மனித உரிமைப் பேரவையின் எந்த வொரு தீர்மானத்தையும் அமுல்படுத்த தவறியுள்ளது என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றாம்.

ஜெனீவாவில் 2015ம் ஆண்டு புரட்டாதி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனத் தலைப்பிடப்பட்ட தீர்மானம் 30- 1 க்கு இலங்கை அரசானது இணை அனுசரணை வழங்கியதுடன் மீண்டும் 2017ம் ஆண்டு பங்குனி மாதம் தீர்மானம் 30 -1 ஐ அமுல்படுத்துவதற்கு 2 வருட நீடிப்பைப் பெற்றுக் கொள்ளும் தீர்மானமாகிய 34 -1 இற்கும் இணை அனுசரணை வழங்கியது.

அதே போல் மீண்டும் 2019 மார்ச்சில், இணை அனுசரணை வழங்கி மீண்டுமொருமுறை இரண்டு வருட கால அவகாசத்தை பெற்றுக் கொண்டது. கால நீடிப்புகளைப் பெற்றுக் கொண்ட முன்னைய அரசானது ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியது மட்டுமல்லாது அதற்கு முரணாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களும் தாம் ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று
திரும்பத் திரும்ப ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தார்கள்.

தற்போதைய புதிய அரசானது ஒருபடி மேலே சென்று தீர்மானத்தின் 30 -1, 34- 1, 40- 1 என்பவற்றுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதுடன் ஐநா வின் பொறுப்புக்கூறல் செயல்பாட்டிலிருந்தும் விலகியுள்ளது.

மேலும் ஐ.நா வை இழிவுபடுத்தும் விதமாக சிறுவர்கள் அடங்கலாக பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்ட ஒரேயொரு படைச் சிப்பாயும் தற்போதைய ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் போர்க்குற்றங்கள் புரிந்தமைக்காக நம்பத்தகுந்த முறையில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த பல்வேறு சிரேஸ்ட இராணுவ
அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், யுத்த வீரர்களாகவும் மதிப்பளிக்கப் பட்டுள்ளார்கள்.

ஐ.நா வின் செயலாளர் நாயகத்தின் இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான நிபுணர்களின் 2011 மார்ச் மாத அறிக்கையின்படி, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புவிகளுக்கும் இடையில் இடம் பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்களும், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், 40000 மேற்பட்ட பொதுமக்கள் கடைசி 6 மாத காலத்தினுள் இறந்தமைக்குமான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் அறிக்கையிட்டுள்ளனர்.

ஐ.நா செயலாளர் நாயகத்தின் நடவடிக்கை தொடர்பான 2012ம் ஆண்டின் நவம்பர் மாத உள்ளக மீளாய்வு அறிக்கையின்படி 2009 இல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது 70000 பேர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.

பாதுகாப்பு வலயம் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறீவங்கா அரச படையால் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்டக் குண்டுத் தாக்குதலாலும் எறிகணை வீச்சினாலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகளும், உணவு விநியோக நிலையங்களும் கூட குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகினர். பலர் பட்டினியாலும் போதிய மருந்து வசதியின்மை காரணமாக இரத்தப் போக்கினாலும் பலர் இறந்துள்ளனர்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு பெப்ரவரி 2017ம் ஆண்டு ஐநா நாடுகளிடம் தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்து, இலங்கை இராணுவத்தால் நடார்த்தப்பட்ட வன்முறை முகாம்கள் பற்றி தகவல்களை கையளித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஏப்ரல் 2013ம் ஆ்ணடு அறிக்கைகளின் படி இலங்கையில் 90 ஆயிரத்துக்கு அதிக யுத்த விதவைகள் உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் அறிக்கையில், உலகிலேயே வலிந்து காணாமல் போனோர் தொகையின் அளவில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் கொண்டு சென்று நிறுத்த உதவ வேண்டும்.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதானது அதனை தண்டனையிலிருந்து தப்பிக்க வழி செய்வதுடன், இலங்கை அரசின் கொடுமையான சட்டங்களாலும் தமிழர் தாயக பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவ பிரசன்னத்தாலும் தமிழ் மக்களிற்கு எதிரான வன்முறைகளிற்கு இது வழிசமைக்கும்.

மியன்மார் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறைக்கு நிகரான ஒரு பொறிமுறையை இலங்கையில் உருவாக்கி 2002 பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையில் சர்வதேச சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி, ஆதாரங்களை ஆராய்ந்து கோப்பு ஒன்றை உருவாக்கி சர்வதேச தரத்திலான சட்ட நடவடிக்கைகளை சர்வதேச நீதிம்றத்தில் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்தில் சட்ட நடவடிக்கைகளை நேர்மையாக மேற்கொள்ள வசதி செய்தலும், விரைவுபடுத்தலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டம்.

இலங்கையில் நீண்ட காலமாக புரையோடிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்காக சர்வதேசத்தால் ஒழுங்கமைக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதுமான ஒரு சர்வசன வாக்கெடுப்பினை நடாத்தி இலங்கை அரசினால் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்படும் மனித கொடுமைகள் மீளவும் நடைபெறாதிருக்க இலங்கையில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருக்கும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன் சர்வதேச ஒழுங்கமைப்புடன் சர்வதேசத்தால் கண்காணிக்கும் வகையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுதல் வேண்டும்.

நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றில்லாமையால் தமிழ் மக்களிற்கு எதிரான வன்கொடுமைகள் 50 ஆண்டுகளிற்கு மேலாக 1958, 1977, 1983, 2009 ஆண்டுகளில் திரும்ப திரும்ப மேற்கொள்ளப்படுவதற்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளது.

யுத்த குற்றங்கள் இடம்பெறவும், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் மற்றம் இனப்படுகொலைகள் இடம்பெறுவதற்கும் பெரும் பங்காற்றியுள்ளது. மேலும், தமிழ் இனத்தவர்கள் என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், வகை தொகையாக பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உட்படுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டும் உள்ளனர்.

நிரந்தர அரசியல் தீர்வொன்றுதான் இலங்கை தீவில் நிரந்தர சமாதானத்தை அடையவும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் திடமான நிலை ஒன்று அமையவும் உதவி செய்யும்” என்றார்.