யாழ்.பல்கலைக்கழக இலட்சினையைமாற்ற முற்படுவதை தடுத்து நிறுத்துக-துணைவேந்தரிடம் கோரிக்கை

71
93 Views

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள், அண்மையில் தயாரித்த ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ந.பொன்ராசா  மின்னஞ்சல் மூலம் மேற்படி கோரிக்கை கடிதத்தை துணைவேந்தருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் பாரம்பரியங்கள் நிறைந்தது. சைவப் பாரம்பரியம் மிக்க சேர்.பொன். இராமநாதன் அவர்களால் தொடங்கப்பட்ட பரமேஸ்வரா கல்லூரியை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடையாளமாக இன்றும் பரமேஸ்வரன் (சிவன்) ஆலயம் யாழ்.பல்கலைக்கழகத்தின் வணக்கத் தலமாக இருந்துவருகின்றது.

வரலாற்றுக் காலம் முதல் தமிழர்களின் சின்னமாகப் பேணப்பட்டதும், தமிழையும் சைவத்தையும் அடையாளமாகக் கொண்டதுமான நந்தி யாழ். பல்கலைக்கழகத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை மாற்ற முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுவும், தமிழ் சித்தர்களின் வழி வந்த, தமிழர்களின் தொன்மை மருத்துவமான சித்தமருத்துவத்தை கற்கின்ற சித்தமருத்துவத்துறை மாணவர்கள் அதன் தொன்மைகளை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

மாற்றியமைக்கப்பட்ட சின்னம் பொறிக்கப்பட்ட ரி-சேர்ட்களை சிங்கள மாணவர்கள் அதிகமாக தயாரித்து பல்கலைக்கழக மாணவர்கள் அல்லாதோருக்கு விற்பனை செய்தமையும் தெரியவந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தை மாற்றியமைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக்கூடாது.

எனவே, குறித்த விவகாரத்தில் துணைவேந்தர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையைக் கண்டறியவேண்டும். தவறிழைத்தவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், மாற்றியமைக்கப்பட்ட சின்னம் பொறிக்கப்பட்ட ரி-சேர்ட்கள் அனைத்தையும் மீளப் பெற்று பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னம் பொறிக்கப்பட்ட ரி-சேர்ட் தயாரிப்பதற்கு மாணவர்களை வழிப்படுத்தவேண்டும். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கை கடிதத்தின் பிரதி சித்தமருத்துவத்துறை பீடாதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here