சீனா- இந்தியாவுடன் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள சிறீலங்கா திட்டம்

வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை தக்கவைக்கும் முகமாக 2.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணப்பரிமாற்றத்தை சீனா மற்றும் இந்தியாவுடன் மேற்கொள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சிறீலங்காவின் வெளிநாட்டுக் கையிருப்பை தக்கவைத்து வர்த்தக கடன்களை பெறுவதற்கு சிறீலங்கா வழியைத் தேடுகின்றது. சிறீலங்காவின் வெளிநாட்டுக் கையிருப்பு தற்போது 5.6 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் வீழ்ச்சியடையும் ரூபாயின் பெறுமதியையும் தடுக்க முடியும் என சிறீலங்கா மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை சிறீலங்கா அமைச்சரவை விரைவில் வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பணப்பரிமாற்றம் என்பது இரு தரப்பும் ஓரே பெறுமதியான பணத்தை பரிமாறிக் கொள்வது. இது கடன் அடிப்படையில் இருக்கும். அதன் பின்னர் பணத்தின் பெறுமதிக்கு ஏற்ப அதனை மீளச் செலுத்த வேண்டும்.

சீனாவின் மத்திய வங்கியுடன் 1.5 பில்லியன் டொலர்களையும், இந்தியாவின் கையிருப்பு வங்கியுடன் 1 பில்லியன் டொலர்களையும் மாற்றிக் கொள்வதற்கு சிறீலங்கா திட்டமிட்டுள்ளது.