கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந்

160
291 Views

தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆலயங்களை மையமாக கொண்டும் கலைகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஒவ்வொரு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள் இருந்து வந்ததுடன், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை தமது சந்ததிக்கு கொண்டும் சென்றுள்ளனர்.

                கலைஞர்களின் திறமையும், நுணுக்கமும் பலரையும் கவர்ந்துள்ளதுடன், கலைகள் கலைகளுக்காக அல்ல. மக்களுக்காகவே கலைகள் என்ற சிந்தனைக்கு அமைவாக அவர்கள் கலைகளை தமது தொழிலாக கொண்டு வாழ்வாதாரத்தையும் கொண்டு நடத்தியுள்ளனர். மன்னர் ஆட்சிக் காலத்தில் மன்னர்களுக்கு புகழ்பாடி பரிசு பெறுபவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது கலைகளால் மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதித்து வாழும் கலைஞர்களும் உள்ளனர்.

                அந்த வகையில், சிற்பக்கலையில் சிறந்து விளங்கி கோவிட் – 19 தாக்கத்தால் பாதிப்படைந்த வவுனியாவைச் சேர்ந்த ஒரு கலைஞரின் கதையே இது. கடந்த 38 வருடங்களாக சிற்பக்கலை வேலையில் ஈடுபட்டு, தற்போது வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார் 52 வயது அந்தோனி யேசுதாஸ்.

                வவுனியாவின் பின்தங்கிய மீள்குடியேற்ற கிராமமே சுந்தரபுரம். இங்குள்ள மக்களில் பலர் தினக்கூலி  வேலை செய்பவர்களாகவும், சிலர் விவசாயம் செய்பவர்களாகவும் உள்ள நிலையில், கடந்த 38 வருடமாக தனது சொந்த முயற்சியால் தனக்கு தெரிந்த சிற்பத் தொழிலை செய்து, அதன் மூலம் 5 பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு, தமது குடும்பத்தைக் கொண்டு நடத்தி வருகிறார்.

                கருங்கல்லினைப் பெற்று அதனைக் கொண்டு சிறியளவிலான இயந்திரங்களின் துணையுடன் தெய்வ உருவங்கள், சிலைகள், நினைவு நடுகைக் கற்கள், மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களான அம்மி, ஆட்டுக்கல், கல் உரல் என பலவகையான சிற்பச் செதுக்கல் வேலைகளை செய்து வந்தார். வவுனியா மட்டுமன்றி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, புத்தளம், கிளிநொச்சி என வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கும் தனது கைவண்ணத்தில் சிற்பங்களையும், வீட்டுப் பாவனைப் பொருட்களையும் செதுக்கி கொடுத்து வந்தார்.

 

                இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஒரு இலட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்ற இவர், தனது மூத்த பெண் பிள்ளைக்கு அந்த வருமானத்தைக் கொண்டு திருமணம் செய்தும் வைத்துள்ளதுடன், நான்கு பிள்ளைகளின் கல்விச் செலவையும், நாளாந்த குடும்ப வாழ்வாதார செலவையும் மேற்கொண்டு வந்தார்.

                இந்நிலையில், கோவிட் – 19 இன் தாக்கத்தால் இவரது சிற்பச் செதுக்கல் வேலைகளும் ஆட்டம் கண்டுள்ளது. ஊரடங்குச்சட்ட அமுல், வெளியிட போக்குவரத்துத் தடை, ஆலய விசேட நிகழ்வுகளுக்கான தடை என்பன காரணமாக சிற்பச் செதுக்கல் வேலைப்பாடுகளுக்கான கேள்வி இல்லாமல் போயுள்ளது. இதனால் வருமானமின்றி தனது நாளாந்த வாழ்வாதாரத்தை போக்குவதற்காக பிள் ளைகளுடன் போராடுகின்றார் இந்த கலைஞர்.

                புலம்பெயர் உறவுகள் பல்வேறு துறையினருக்கும் உதவிகளை வழங்கும் நிலையில், தங்களைப் போன்ற சிற்பக் கலைஞர்களையும் கண்டு கொள்வதுடன், தங்கள் வீட்டு சமையலறையிலும் அடுப்பெரிய உதவ வேண்டும் என்பதே அவரது அங்கலாய்ப்பு. இதுவே இன்று பல சிற்பக்கலைஞர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here