நினைவில் நீங்காத லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணர்

24.12.2020 அன்று விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான அப்பையா அண்ணரின் 23ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

மானிப்பாயைச் சேர்ந்த இராசதுரை அல்லது இராசையா என அழைக்கப்பட்ட அப்பையா அண்ணர் 1978 காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களோடு இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்க முன்வந்திருந்தார். ஆரம்பத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் மட்டக்களப்பு, வவுனியா என சில இடங்களில் பணியாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்பெடுப்பதற்கு முன்பே திருமணமாகி இருந்த போதிலும், இயக்கத்தில் இணைந்து கொண்டிருந்தார். விடுதலைப்புலிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு தங்கும் இடங்களை ஏற்படுத்திக் கொடுத்து, போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து, அவர்களது முக்கியமான பணிகளை நிறைவு செய்து வந்தார். அவர் அரச ஊழியராக இருந்த காரணத்தினால் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு போராளிகளைப் பாதுகாத்து வந்தார்.

1981 ஜூன் மாதம் முதல் வாரம் தேசியத் தலைவரும் மற்றும் சில போராளிகளும் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்த பின், ஈழத்தில் தங்கி நின்று செயற்பட்ட போராளிகளோடு  சேர்ந்திருந்து அவர்களது பாதுகாவல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அப்பையா அண்ணர்.

1982 செப்டம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்முகமாக பொன்னாலை பாலத்தில் வைத்து அவ்வழியே வரும் கடற்படை வாகனங்களுக்கு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. புலிகள் கண்ணிவெடி களைப் புதைத்துவிட்டு காத்திருந்தனர். பார்சல் குண்டுத் தாக்குதல்கள், கண்ணி வெடிச் செயற்பாடுகள், வெடிமருந்துப் பாவனை என்பனவற்றில் ஆரம்ப காலப் பகுதியில் இருந்தே மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த அப்பையா அண்ணரும், பொன்னாலைத் தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார். மின்பிறப்பாக்கி ஒன்றின் மூலம் மின்சார இணைப்புகள் பொருத்தப்பட்டு, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

அதிகாலை 6.30 மணியளவில் மிகப் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தன. ஆயினும் அதில் ஏற்பட்ட சிறு தவறு ஒன்றின் காரணமாக வாகனங்கள் சேதங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொண்டன. உடனடியாக வாகனங் களை விட்டிறங்கிய கடற்படையினர்  போராளிகளைத் துரத்திச் சென்றனர். போராளிகள் தப்பிச் சென்றுவிட்ட போதிலும் அவர்கள் பாவித்த மின்பிறப்பாக்கி கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது. அந்த மின்பிறப்பாக்கி அப்பையா அண்ணரின் சொந்தப் பெயரில் வல்வெட்டித்துறையில் உள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பையா அண்ணனும் தலை மறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார்.

ஈழத்தில் இருந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்பதனால், அப்பையா அண்ணரும் தமிழகம் வந்து சேர்ந்தார். அக்காலப் பகுதியில் தேசியத் தலைவர் அவர்களும் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து மதுரையில் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டிருந்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பழைய சத்திரம் ஒன்றில் போராளிகள் சிலர் தங்கியிருந்தனர். அப்பையா அண்ணரும் அவர்களோடு இணைந்து கொண்டார்.

download 2 நினைவில் நீங்காத லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணர்

82ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி லெப்டினன்ட் சங்கர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 25ஆம் திகதி அளவில் தமிழகம் கொண்டு வரப்படுகின்றார். மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சைகள் பலன் அளிக்காது சங்கர் உயிர் துறக்க நேரிட்டது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் உயிர்நீத்த சங்கரின் உடல் மதுரையில் உள்ள மயானம் ஒன்றில் தீயோடு சங்கமித்தது. அப்பையா அண்ணரே சங்கரின் உடலுக்குக் கொள்ளி வைத்தார். 1983இன் முற்பகுதியில் தலைவர் அவர்கள்  நாட்டுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து அப்பையா அண்ணர் உட்பட்ட போராளிகளும் தமிழீழம் திரும்பினர். 1983ஆம் ஆண்டு இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீதான திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலில் தேசியத் தலைவர் உட்பட்ட மற்றைய போராளிகளோடு அப்பையா அண்ணரும் பங்கேற்றிருந்தார். ஐம்பது வயதான அப்பையா அண்ணர் இளைஞர்களோடு இணைந்து மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டார். கண்ணிவெடி புதைப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும். தார்ரோட்டில் கிடங்கு வெட்டி அதனுள்ளே வெடி மருந்தை அடைக்கும் பணியில் லெப்டினன்ட் செல்லக்கிளி, லெப்டினன்ட் கேணல் விக்டரோடு இணைந்து அப்பையா அண்ணரும் ஈடுபட்டார்.

83 ஆடிக் கலவரத்தை தொடர்ந்து இந்திய அரசு ஈழப்போராளிகள் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்க முன்வந்தது. ஆயுதப் பயிற்சிக்கென ஈழத்தில் இருந்து தமிழகம் வந்திருந்த விடுதலைப்புலிப் போராளிகளோடு அப்பையா அண்ணரும் வந்திருந்தார்.அவரது வயது காரணமாக இந்தியப் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் அப்பையா அண்ணனை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் பயிற்சி பெற்றிருக்காவிடினும் இயக்கத்தின் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் அப்பையா அண்ணர் பங்குபற்றியிருந்தார்.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படையினரோடு யுத்தம் ஆரம்பமாகி நடைபெற்ற காலப்பகுதியில் தேசியத் தலைவரும் இயக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனால் தேசியத் தலைவர் அவர்களும் குறிப்பிட்ட சில மூத்த போராளிகளும் மணலாற்றுக் காட்டுக்கு சென்றனர். தேசியத் தலைவர் மணலாற்றுக் காட்டில் புனித பூமியில் வாழ்ந்த காலப்பகுதியில் அப்பையா அண்ணரும் அங்கு வாழ்ந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்தார். பிரேமதாசா அரசு இயக்கத்திற்கு ஆயுத உதவிகள் வழங்கிய காலப்பகுதியில் மணலாற்றுப்  பிரதேச எல்லையில் உள்ள சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் வழியாக ஆயுதங்களும் போர்த் தளபாடங்களும் புலிகளிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புனிதபூமி முகாமில் யாரெல்லாம் சென்று ஆயுதங்களைப் பெற்று வருவதென பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, அப்பையா அண்ணரும் தேவர் அண்ணாவும் தங்கள் பெயர்களை வழங்கியிருந்தார்கள். மறுநாள் காலையில் ‘கம்பால’ (முகாம் வாழ்வுக்கு தேவையான பொருட்களை தொங்கு பைகளில் மரத்தடி அல்லது கம்பு ஒன்றில் கட்டி காவும் நடைமுறை )   செல்வதற்காக பழசுகள் இரண்டும் கம்பு ஒன்றுடன் தயாராக நின்றிருந்தனர். அங்கு வந்த தலைவர் அவர்கள் “என்ன நீங்களும் போறீங்களோ?காட்டுக்குள்ளை கனதூரம் நடந்து போய் தூக்கிக் கொண்டு வரவேணும். உங்களுக்கு கஷ்டமாய் இருக்கும். போகவேண்டாம்” என்றார். “இல்லைத் தம்பி எங்களுக்கு கஷ்டம் இல்லை.நைன்ரியள் நாங்களும் எல்லா வேலையும் செய்வம் எண்டதை இங்கை சிலருக்கு காட்ட வேணும். எங்களை மறியாதையுங்கோ” என்று சொல்லி ‘கம்பால’ சென்று  ஆயுதப் பெட்டி ஒன்றை சுமந்து கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். இப்படி அப்பையா அண்ணர் வயதில் மூத்தவராக இருந்தாலும் தன்னையும் ஈடுபடுத்தி உழைத்து வந்தார்.

இயக்கத்தின் கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில் 90 களில் அப்பையா அண்ணர் தயாரித்த நெல்லி ரசம் யாழில் பிரபல்யம் பெற்று விளங்கியது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் ஒருபகுதியை இயக்கத்திற்கு வழங்கி வந்தார். தனது இறுதிக்காலம் வரை இயக்கத்தின் கொடுப்பனவைப் பெறாமல் தனது ஓய்வூதியப் பணத்தின் உதவியோடு வாழ்ந்து வந்தார். இறுதிக் காலப்பகுதியில் இயக்கப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது மனைவியோடு மல்லாவிப் பகுதியில் வாழ்ந்து வந்தார். 24.12.97 அன்று மல்லாவியில் இருந்து வவுனியாவில் தங்கியிருந்த வளர்ப்பு மகளை சந்திப்பதற்காக தனது சிறியரக மோட்டார் வண்டியில் காட்டுப் பாதையினூடாகச் சென்றபோது எதிரிகள் அவரது உயிரைப் பறித்தெடுத்திருந்தனர். விடுதலைப்புலிகள் இருக்கும்வரை என்றென்றும் போராளிகளின் மனங்களில் அப்பையா அண்ணரின் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

  -தேவர் அண்ணா