‘விடுதலை’க்குத் தயாரான விரிவுரையாளருக்கு கொரோனா – கந்தக்காட்டுக்கு மாற்றம்

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“கண்ணதாஸை வீடு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கொரோனா சிகிச்சை நடைமுறைகளுக்கு அமைய அவருக்கான தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெற்றதும் அவர் வீடு திரும்புவார். கண்ணதாஸனுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்று வருகின்றன” என்றார்.