கால அவகாசமா? புதிய தீர்மானமா? பேரவையிலிருந்து வெளியேறுவதா? – அகிலன்

136
173 Views

ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன. 

2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை மனித உரிமைகள் அமைப்பின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டம் ஈழத் தமிழரைப் பொறுத்தளவில் மிகமிக முக்கியமானது. அடுத்ததாக என்ன நடைபெறப் போகின்றது என்பது இந்தக் கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும்.

இலங்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், ‘நல்லாட்சி’ பதவிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி இலங்கை தொடர்பான 30/1 இலக்கத் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் போர்க்குற்றம், பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை ஆகியவற்றுக்கான இத்தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. ‘நல்லாட்சி’ அரசு இதற்கு இணை அனுசரணை வழங்கியது. இணை அனுசரணையை வழங்குவதற்கான தீர்மானத்தின் ‘காரத்தை’ குறைப்பதில் இலங்கை வெற்றிபெற்றது.

தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. தீர்மான முடிவுகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மூன்று வருட அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு வருடகால நீடிப்பு வழங்கப்பட்டது. மைத்திரிபால – ரணில் அரசுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பே முன்னின்று இக்கால நீடிப்பைப் பெற்றுக் கொடுத்தது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத மற்றைய தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் இதனை வன்மையாகக் கண்டித்தனவாயினும், அவர்களின் குரல்கள் எடுபடவில்லை.

காலநீடிப்பு முடிவடைய ஒரு வருடம் இருக்கும் நிலையில், ராஜபக்சக்களின் ஆட்சி இலங்கையில் மீண்டும் வந்துள்ளது. இணை அனுசரணையிலிருந்து வெளியேறுவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ள ராஜபக்‌ஷக்கள் அதனை ஜெனீவாவிலும் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டனர். வரப்போகும் அமர்வு முக்கியத்துவம் பெறுவதற்கு முதலாவது காரணம் அதுதான். ஐந்தாண்டு அவகாசம் முடிவடையும் காலமாக அடுத்த அமர்வு மார்ச்சில் வருகிறது. அடுத்த கட்டம் என்ன? ராஜபக்‌ஷக்களை ஜெனிவா எவ்வாறு கையாளப் போகிறது?

சுமந்திரனின் யோசனைகள்:

மீண்டும் ஒரு கால அவகாசத்தை வழங்குவது என்பது ராஜபக்‌சக்களுக்கு ‘வெற்றுக் காசோலை’யை வழங்குவதாக அமைந்துவிடும் என புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், இலங்கை மீதான ‘பிடி’யைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு கால அவகாசம் வழங்குவதுதான் ஒரே தெரிவாக இருக்கும் என்ற கருத்து சில மட்டங்களில் காணப்படுகின்றது. ஆனால், பிரேரணையை ஏற்றுக்கொள்வதற்கோ, அதனை நடைமுறைப்படுத்துவதற்கோ தயாராக இல்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிக்கொள்ளும் ராஜபக்‌சக்களுக்கு கால அவகாசத்தை வழங்குவதால் பலனுள்ளதா என்ற கேள்வியும் இவ்விடத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களுடன் பேசிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தயாரித்த ஆவணம் ஒன்றுதான் தமிழ் அரசியல் பரப்பில் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெனீவாவில் கையளிப்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட இந்த யோசனைகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இருவருமே சுமந்திரனின் யோசனைகளை அடியோடு நிராகரித்து விட்டனர்.


வழமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இதில் தனித்த நிலைப்பாட்டை எடுப்பது வழமையாக இருந்த போதிலும், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியிருக்கும் நிலையில் அவர்களுடைய கருத்துக்களை அறிவதிலும் சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டிவருகின்றது. அதனைவிட, அவர்களும் இம்முறை ஜெனீவாவை அணுகுவதற்கான புதிய வியூகங்களை அமைத்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களையும் அணைத்துக்கொண்டு செல்ல வேண்டிய தேவை சுமந்திரனுக்கு ஏற்பட்டது.

விக்கி, கஜன் நிராகரிப்பு:

கஜேந்திரகுமார் இந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்ட போது, தெளிவாக ஒரு விடயத்தை சுமந்திரனிடம் கூறியிருந்தார். “இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயனில்லை. அதற்குள்ளாகத்தான் பிரச்சினையைத் தேட வேண்டும் என்றால் எமக்கு அதில் உடன்பாடில்லை” என கஜேந்திரகுமார் உறுதியாகக் கூறியிருந்தார். “இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்தும் பேரவையில் வைத்திருப்பதென்பது உண்மையில் விசாரணை நடத்தப்பட வேண்டிய இடத்துக்கு இதனைக் கொண்டு செல்வதைத் தடுப்பதாகவே இருக்கும்” என்பதுதான் தமது நிலைப்பாடு என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

விக்னேஸ்வரனும் சுமந்திரனின் யோசனையை திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார். சர்வதேச அரசியல் நிபுணர்கள் சிலருடன், இது பற்றி ஆராய்ந்த விக்னேஸ்வரன் எழுத்து மூலமாக சுமந்திரனுக்குப் பதிலளித்திருக்கின்றார். “எம்முடைய தற்போதைய சிந்தனைப்படி சட்ட ரீதியாக மூன்று விதமான நீதிமன்றங்களை நாம் நாடலாம்” எனக் குறிப்பிட்டிருக்கும் விக்கினேஸ்வரன் பின்வரும் மாற்று யோசனைகளை முன்வைத்திருக்கின்றார்.

1.சர்வதேச குற்றவியல் மன்றம் International Criminal Court (ICC)

2.சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்; International Criminal Tribunal (ICT)

3.சர்வதேச நீதிமன்றம் International Court of Justice (ICJ)

இதில் சர்வதேச நீதிமன்றமே (ICJ) எமக்கு உகந்த மன்றமாகத் தெரிகின்றது” என விக்கினேஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருக்கின்றார். அவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் பிரச்சினையை வைத்திருப்பதை விரும்பவில்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது. மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே சிக்குண்டிருந்தால், இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்க முடியாது என அவர் கருதுகின்றார்.

இந்த நிலையில் “தேசியத்துக்காகக் குரல் கொடுக்கும்” தமிழ்க் கட்சிகள் எனக் கூறப்படும் கட்சிகளிடையே இரண்டு விதமான நிலைப்பாடு இருப்பது தெரிகின்றது. கூட்டமைப்பு கால அவகாசத்தை அல்லது பேரவைக்குள் பிரச்சினையை வைத்திருப்பதை விரும்புகின்றது. சுமந்திரனின் யோசனை அதனை உணர்த்துகின்றது. கூட்டமைப்பின் ஏனையவர்கள் அதனை ஏற்கின்றார்களா அல்லது இது வெறுமனே சுமந்திரனின் முடியா என்ற கேள்வியும் உள்ளது.

கஜன், விக்கி தரப்புக்கள் பேரவையிலிருந்து சர்வதேச நீதிமன்றத்துக்குப் பிரச்சினை கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றன. ஆக, இந்த மூன்று தரப்புக்களுக்குள்ளும் ஒற்றுமை – அல்லது ஒருமித்த அணுகுமுறைக்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

அமெரிக்கா புதிய பிரேரணை?

இதேவேளையில், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் வகையில், புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவருதற்கு இயலுமானதாக இருக்கும்  என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க  தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்திருப்பது இவ்விடயத்தில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை வியாழக்கிழமை சந்தித்தபோதே இதனை அவர் கூறியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்திலிந்து வெளியேறியுள்ள நிலையில், அதே தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தீர்மானம் ஒன்றை மீண்டும் கொண்டுவந்து, அதற்காக கால அவகாசத்தைக் கொடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்காது என்பதால்தான், புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா விரும்புவதாக தூதுவர் தெரிவித்திருக்கின்றார். பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாக புதிய பிரேரணை இருக்கும் என தூதுவர் தெரிவித்திருக்கின்ற போதிலும், அது குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளின் பின்னணியில் அமெரிக்காவே இருந்தது. தற்போது, அமெரிக்கா, பேரவையின் உறுப்பினராக இல்லை என்ற போதிலும், ஜெனீவாவில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய நாடாக இருக்கின்றது. அந்த வகையில்தான் புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. வரக்கூடிய பிரேரணை கடுமையானதாக இருக்க வேண்டுமானால், அதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுக்குப் பெரும் பொறுப்பு இருக்கின்றது.

மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் எந்தவிதமான தீர்மானத்தையும் ஏற்பதில்லை என்பதில் ராஜபக்‌சக்கள் உறுதியாக இருக்கும் நிலையில், அமெரிக்கா கொண்டுவரப் போவதாகச் சொல்லும் புதிய பிரேரணை கூட, பயனற்றதாகப் போகக்கூடும். இந்த நிலையில்தான் கஜேந்திரகுமார் சொல்லும், “இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்தும் பேரவையில் வைத்திருப்பதென்பது உண்மையில் விசாரணை நடத்தப்பட வேண்டிய இடத்துக்கு இதனைக் கொண்டு செல்வதைத் தடுப்பதாகவே இருக்கும்” என்ற கருத்து முக்கியத்துவம் பெறும்.

‘மீண்டும் கால அவகாசம்’ என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள இப்போது யாரும் தயாராக இல்லை. அதனால், கடுமையான ஒரு புதிய பிரேரணையைக் கொண்டுவருவது என்பது குறித்தே அதிகளவுக்கு அக்கறை செலுத்தப்படுவதை கொழும்பு அரசியல், இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகின்றது. அதேவேளையில் நடைமுறைப் பிரச்சினைகளால் கஜன், விக்கி போன்றவர்கள் சொல்லும், சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்களும் உடனடியாக இருப்பதாகத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here