சிகிச்சை தாமதத்தால் சிறுமி மரணம்- குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுமிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் உயிரிழந்தது தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர் தெரிவித்தார்.

கடந்த 20-11-2020 அன்று தேற்றாதீவு என்னும் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 07வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த விபத்தின்போது குறித்த சிறுமி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடனடி சத்திரசிகிச்சை செய்யவேண்டிய அவசியமிருந்தது. அதற்காக  மருத்துவ பரிசோதனைகள் செய்யவேண்டிவதற்கான பரிந்துரைகள் வைத்தியர்களினால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டிய உத்தியோத்தர்கள் தமது கடமையினை செய்ய தவறியிருந்தனர். மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சிறுமி சிகிச்சையளிக்கப்படாத நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுமியின் தலையில் இருந்து இரத்தம் சிந்தியவண்ணம் இருந்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு 25-11-2020அன்று மட்டக்களப்பு பொலிஸாருக்கு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பணித்திருந்தார்.

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரிகளால் சுமார் 08பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றில் பொலிஸாரின் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து நீதிபதி சம்பவ தினம் கடமையில் இருந்த சகல கதிரியக்க பரிசோதனை உத்தியோகத்தர்களையும் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.அன்றைய தினம் 15பேர் வரையில் கடமையில் இருந்ததாக மட்டக்களப்ப பொலிஸாரினால் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.