தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். – அருட்தந்தை ம.சக்திவேல்

அரச தரப்பின் மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பகடைக்காயாக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ம.சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக அவரிடம் ‘இலக்கு’ மின்னிதழ் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலின் கருத்து வடிவம்.

அரசியல் சுயலாபம் கருதி கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக பல தடவைகள் ஆட்சியாளர்களுடன் பேசப்பட்டுள்ளது. தொடர்சியாக நாம் பேசி வந்துள்ளோம்.

இந்த நிலையில், கடந்த தேர்தல் காலத்தில் தற்போது அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கைதிகள் தொடர்பில் ஒரு பெயர்ப் பட்டியலை பிரதமர் மகிந்தவிடம் கையளித்திருந்தார். ஆதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு பெயர்ப் பட்டியலை கையளித்தார். பின்னர் நீதியரசர் க.விக்னேஸ்வரனும் ஒரு பட்டியலை கையளித்திருந்தார்.

இப்போது இரண்டாம் கட்டமாக அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சருடன் சந்திப்பை மேற்கொண்டு, அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மகஜரை கையளித்துள்ளதுடன்,  ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு நாள் குறித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து அரச தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முதல் கட்டத்தில்  போட்டி மனப்பான்மையுடன் அரசியல்  வாக்குவங்கியை தக்கவைப்பதற்கு அரசியல் கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஒன்றன் பின் ஒன்றாக பிரதமரிடம் கொடுக்கப்பட்டது.  அரச தரப்பு அதை ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா என அவர்களுக்கு தெரிந்தும் சுயலாபம் கருதி அந்த பட்டியல் கொடுக்கப்பட்டது.

இப்போது அரசியல் கொலை குற்றச்சாட்டில் மரணதண்டனைக் கைதியாக உள்ள துமிந்த சில்வாவை விடுதலை செய்ய வேண்டும் என அரச தரப்பினர், எதிர்த் தரப்பினர் இணைந்து கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக, மனசாட்சி உந்தப்பட்டவர்களாக தான் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள். இதில் பெரும் அரசியல் சுயலாபம் முன்வைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இது உண்மையான அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வேண்டுகோளா? அல்லது அரசியல் கட்சிக் காரர்களின் சுயநலமா என்ற கேள்வி எழுகிறது.

நல்லாட்சியில் கைதிகளை விடுவிக்க முயற்சி செய்யவில்லை

அரசியல் கைதிகள் தொடர்பில் காலத்துக்குகாலம் கோரிக்கைகளை முன்வைக்கிறார்களே தவிர தொடர்சியான தீர்வுக்கு மக்கள் பிரதிநிதிகள் வேலை செய்யவில்லை என எமக்கு தெரியும்.  தமிழ் தலைமைகள் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு வந்து முகம் கொடுப்பதும், அறிக்கைகள் விடுவதுடனுமே நின்று விட்டார்கள். வேறு ஒன்றும் செய்யவில்லை.

நல்லாட்சிக் காலத்தில் இவர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது. இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இப்போது ஏன்  கூட்டுச் சேர்ந்தார்கள். இந்த கூட்டில் சந்தேகம் உள்ளது.

egypt prison தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். -	அருட்தந்தை ம.சக்திவேல்

தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள்.

அரச தரப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலைக்காக அரசியல் கைதிகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். அரசியல் கைதிகளை அவர்கள் பாவிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் தலைமைகள் இதற்கு இடம் கொடுக்கப் போகிறார்களா?

எமக்கு தெரியும். இந்த ஆட்சியளர்கள் பதவிக்கு வரமுன்னரே இந்த நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை. பொருளாதார பிரச்சனைதான் உள்ளது என கூறி ஆட்சிக்கு வந்தார்கள்.  இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனையில்  மக்களை உசுப்பேத்தி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.

இந்த நிலையில், அரசியல் கைதிகளை விடுவித்தால் இந்த நாட்டில் அரசியல் பிரச்சினை இருப்பது என்பதை ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும். அதற்கு இந்த அரசு முன்வருமா? அதை நாம் சிந்திக்க வேண்டும்.

அரசியல் கைதிகளை வகைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கைதிகளை எந்த வகையில் விடுதலை செய்யப் போகிறார்கள். எந்த வகையில் வகைப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது. அரசியல் கைதிகள் பல வகையினர் உள்ளனர். இவர்களை வகைப்படுத்தல்  என்பது அரசியல் கைதிகளை சிதைத்து விடும்.

எனவே அரச தரப்பினர்  சிங்கள பேரினவாதத்தை சிரத்தின் மேல் கொண்டுள்ள இந்த காலத்தில், அரசியல் கைதிகள் என்போரை விடுதலை செய்வதற்கு எந்த வகையில் துணிந்து இருப்பார்கள்.

மகிந்த ஆட்சிக் காலத்திலேயே அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விடுதலை செய்யப்படவில்லை. அவர் போராளிகளை சமூகமயப்படுத்தினார். அதற்கு சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை. அப்போது விடுதலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. எனவே இவை அரசியல் நாடகம்.  நாம் சிந்திக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுதலைக்கு முதலில் நாட்டில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆனால் அதைச் செய்ய அரசு எந்தவகையிலும் ஆயத்தாமாக  இல்லை. இப்போது கைது செய்யப்படுபவர்கள் அந்த சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்ததாக அரசியல் தீர்மானம் எடுத்து, கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு எமது அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறர்கள் என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும். அதில் தான் அவர்கள் விடுதலை தங்கியுள்ளது.

அரசு தமது இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டல், இவர்கள் என்ன செய்யப் போகிறர்கள் என தீர்க்கமான முடிவு. தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை. அதை பதிவு செய்யவும் இல்லை. எனவே இவ்வாறான செயற்பாடுகள் அவர்களின் அரசியல் நலன் சார்ந்ததாகவே உள்ளது. அவர்களிடம் இருந்து விடுதலையை எதிர்பார்க்க முடியாது.

அரச மற்றும்  எதிர்த் தரப்பினரை ஒரு மையப்புள்ளியில் இணைக்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகளின் அரசியல் சிதைவு, கட்சி முரண்பாடு என்பன பெரும் பிரச்சனையாகவுள்ளது. இவர்கள் சுயமாக கைதிகள் விடயம் குறித்து பேசவில்லை சூழ்நிலைதான் இந்த நிலைக்கு இவர்களைத் தள்ளியுள்ளது. ஆனால் அதைக்கூட இவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என தெரியவில்லை

எனவே கைதிகளின் விடுதலைக்காக நாம் பெரும் வேலைத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். அதாவது ஆளும் தரப்பினரையும், எதிர்த் தரப்பினரையும் ஒரு மையப்புள்ளியில் இணைக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம். தற்போது கொரோனா சூழலில் தாமதமடைந்துள்ளது. இந்த செயற்பாட்டின் ஊடாகத்தான் எமது கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஊடாக ஒரணியில் அரசியல் தீர்மானம் எடுக்கலாம். இதன் மூலமே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும். அதுவரை அரசியல் கைதிகளை வகைப்படுத்த கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறோம்.