மீண்டும் நாடு முடக்கப்படலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலை நீடித்தால் குறிப்பாக கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்க நேரும்  என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டால், உடனடியாக அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் திறமைப்பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், சுகாதாரத் துறையினரும் வினைதிறனாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களிடம் இருந்து இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் இரண்டு வாரங்கள் கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.