வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கையின் பொருளாதாரம்?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளது.

கோவிட்-19 தாக்கத்திற்கு மத்தியில் உலகிலுள்ள பல நாடுகள் இவ்வாறான பொருளாதார சரிவை நோக்கி நகர்ந்துள்ளது.

கோவிட்-19 தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரை நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னரான காலத்தில் நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும், மே மாதம் 26ம் திகதி வரை முக்கிய தொழில்துறைகள் மற்றும் வணிக இடங்கள் காணப்படும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமல்படுத்தப்பட்டிருந்தது.

சமூகத்திற்கு இடையில் கோவிட் தொற்று பரவாதிருக்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

2019ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1.1 சதவீதத்துடன் நேரான வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 16.3 சதவீத மறையான வளர்ச்சியென மதிப்பிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டின் 2வது காலாண்டில் நிலையான விலையில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,936,273 மில்லியனாக குறைந்து பதிவாகியுள்ளது.

2019ம் ஆண்டு இதே காலப் பகுதியில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,312,078 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் 2வது காலாண்டில் நடப்பு விலையில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,012,013 மில்லியனாக குறைந்துள்ளதுடன், 2019ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3,589,246 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் நடப்பு விலை 16.1 சதவீத வீழ்ச்சி.

குறித்த காலாண்டில் விவசாயத்துறை 9.7 சதவீத பங்களிப்பையும், கைத்தொழில் 24.8 சதவீத பங்களிப்பையும், சேவைகள் 61.2 சதவீத பங்களிப்பையும், உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் 4.3 சதவீத பங்களிப்பையும் செய்துள்ளன” என இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நன்றி – பிபிசி