சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகின்றார் – அவரது வழக்கறிஞர்

வேலூர் சிறையில் 23 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் மீது பொய் வழக்குப் போட்டு முருகனினதும், மனைவி நளினியினதும் விடுதலையைத் தடுக்க முயல்கின்றனர். அத்துடன் சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகின்றார் என்று முருகனின் வழக்கறிஞர்  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 29 வருடங்களைக் கடந்தும் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருக்கும் முருகன் தனது தாயார் மற்றும் தனது மகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி இன்று (15) 23 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

அவரது உடல்நிலை தொடர்பாக சிறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதுடன், நேற்று மாலை வலுக்கட்டாயமாக அரிசிக் கஞ்சி வழங்கப்பட்டது.

நேற்று மாலை முருகனையும், பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியையும் சந்தித்துப் பேசுவதற்கு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி சென்றிருந்தார். ஆனால் அவருக்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. இதனையடுத்து புகழேந்தி நிருபர்களை சந்தித்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், “தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிறைத்துறை ஊழலை கேட்க முயன்றதால், முருகனின் மீது பொய்யான காரணத்தைக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்களது விடுதலையைத் தடுக்க முயல்கின்றனர். சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகின்றார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.