மாகாண சபைத் தேர்தல்கள் அவசியமில்லை – கோட்டாபாயவை ஆதரித்த தேரர்கள் போர்க்கொடி

“இலங்கைக்கு மாகாண சபை முறைமை அவசியமில்லை. எனவே, அதற்கான தேர்தலை அரசாங்கம் நடத்தக்கூடாது” என்று பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபட்ட எல்லே குணவங்ச தேரர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைப்படி விரைவில் நடத்துவதற்கு அரசு தயாராகி வருகின்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அதற்கு தேரர்கள் இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

“அமைச்சு மற்றும் எம்.பி. பதவியை பெறமுடியாமல்போன சிலர், மாகாண சபையிலாவது தமக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் இலங்கைக்கு மாகாணசபைகள் அவசியமில்லை என்பதே எமது நிலைப் பாடாகும்” என்றார்.

அதேவேளை, “மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் மக்களின் பணத்தில் 80 வீதமானவை அரசியல்வாதிகளை நடத்துவதற்கான செலவீனங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மாகாணசபைகள் தேவையில்லை” என்று பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வலியுறுத்தினார்.

அத்துடன், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எல்லே குணவங்ச தேரர், “மாகாண சபைகள் வெள்ளை யானை என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக் கின்றது. வடக்கு, கிழக்கு மக்கள்கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை. அங்குள்ள மாகாணசபை உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை விடுக்கவில்லை. எனவே, எதற்காக தேர்தல் நடத்த அவசரப்படவேண்டும்?

மூன்றிலிரண்டு பலத்தை பெற்றுக் கொடுத்தோம், 69 லட்சம்பேர் வாக்களித்தனர். 20 ஆவது திருத்தச்சட்டம் மூலம் அதிகாரம் மேலும் பலப் படுத்தப்பட்டது. தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன்மூலம் என்ன செய்யப்போகின்றனர்? அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தி, அவர்களுக்கு வரப்பிரதாசங்களை வழங்கும் முயற்சியே இது. எனவே, தேர்தலை நடத்தும் முடிவுக்கு நாம் அரசுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.