பயங்கரவாதத் தடைச்சட்ட அணுகுமுறை மாற்றமே ஈழத்தமிழர் உரிமைகளுக்குப் பாதுகாப்பை அளிக்கும்

சிறீலங்கா இம்முறை வரவுசெலவுத் திட்டத்திலும், நாட்டின் நாளாந்தத் தேவைகளுக்கே நிதிப்பற்றாக்குறை வருமென்ற பெரும் அச்சமுள்ள சூழலிலும் மக்களின் நலவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பெருந்தொகையான பணத்தை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படையினருக்கு ஒதுக்கியுள்ளது.

இதனை சமத்துவமுள்ள குடிகளாக அல்லாது தோற்கடிக்கப்பட்ட மக்களாக ஈழத்தமிழர்களை தாம் நடாத்தும் இன்றைய சூழலில் அதனை சனநாயக வழிகளில் எதிர்க்கும் ஈழத்தமிழரை சிறீலங்காவின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அழித்து ஒழித்து ஈழத்தமிழின அழிப்பை செய்வதற்கான சிறீலங்காவின் முற்திட்டமிடலாகவே ஈழத்தமிழர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையின் அங்கமான நீதியரசராக நீண்ட சட்டத்துறை அனுபவம் உள்ள முன்னாள் வடமகாணசபைத் தலைவரும் இன்றைய யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித்  தலைவருமான திரு சி.விக்னேஸ்வரன் அவர்கள் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் பேசியுள்ள பேச்சு, ஈழத்தமிழர் பிரச்சினையைக் குறித்த தெளிவையும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினையைப் பயங்கரவாதப் பார்வையில் அணுகும் முறை நீக்கப்பட்டாலே ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற உண்மையையும்  உலகுக்கு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

அவர் தமது உரையில் “சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அதே நாட்டில் தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே அவர்கள் ஆயதம் ஏந்தினார்கள். அவர்கள் தமது அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20இற்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள்”.  என எடுத்தியம்பி உள்ளார். இதன்வழி ஈழத்தமிழர் தேசிய இனப் போரட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமே அன்றி பயங்கரவாதமல்ல என்பதை நிறுவியுள்ளார். ஆயினும் உலகின் தவறான அணுகுமுறையால் அத்தேசிய விடுதலைப் போராட்டம் பின்னடைந்து ஈழத்தமிழர்கள் இன்றைய அவல வாழ்வுக்கு உள்ளாயினர் என்ற உண்மையையும் அவரின் இப்பேச்சு உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் அவர் “நாட்டின் இறைமையைவிட மக்களின் இறைமையே மேலானது. இன்றைய சர்வதேச உறவில் அப்படித்தான் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் சர்வதேச சட்டங்களும், கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் இறைமையின் பின்னால் ஒளிந்து நின்றுகொண்டு எமது மக்களின் இறைமையை இல்லாமல் செய்யலாம் எனக் கனவு காணாதீர்கள். 18ஆம் நூற்றாண்டுக் காலத்துக்குரிய நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் கோட்பாடு இன்று பொருத்தமற்றதாகி வலுவிழந்து விட்டது. ஒரு நாட்டின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும் பொழுது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் இறைமையை உதாசீனம் செய்யலாம் என்பதே இன்றைய உலக நடப்பு” என எடுத்துரைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கான செயற்பாடுகளை இனியும் நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு எதிரானது எனப் பட்டியலிட்டு அவர்களை இனஅழிப்பு செய்ய முடியாதென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் “இறுதிப் போரில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும், அந்த மக்களை நீங்கள் மீட்டதாகவும் எந்த ஒரு போர்க் குற்றத்தையும் படையினர் செய்யவில்லை என்றும் கூறுகின்றீர்கள். இது உண்மையானால் இதை நீங்கள் கூறவேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள்தான் கூற வேண்டும். ஆனால் இறுதி யுத்தத்தில் நீங்கள் காப்பாற்றியதாகக் கூறும் மக்கள் நீங்கள் தமது உறவுகளை கொலை செய்ததாக அல்லவா கூறுகின்றார்கள். நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்குத் தயங்குகின்றீர்கள்? நீங்கள் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதும் சீனாவின் பின்னால் ஓடுவதும் உங்கள் படையினர் போர்க்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றை இழைத்திருக்கின்றார்கள் என்பதையே காட்டுகின்றது”எனவும் கூறியுள்ளார்.

திரு சி.விக்னேஸ்வரன் அவர்களின் இந்த உரையின் உண்மைகளை உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் ஏற்று, பயங்கரவாதத் தடைச்சட்ட அணுகுமுறையில் ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகும் முறையை மாற்றி ஈழத்தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்து, மீண்டும் ஒரு இனஅழிப்புக்கு அவர்கள் ஆளாகாதவாறு தடுப்பதற்குரிய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க புலம்பெயர் தமிழர்கள் உழைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.