‘தேசத்தின் குரல் ஈழமக்கள் உரிமை மீட்புக் குரலாக இன்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது’

107
196 Views

இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இக்குரலுக்குக் செவிகொடுத்தாலே ஈழமக்கள் உரிமைகள் பாதுகாப்புறும்

14.12.2006 அன்று  ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் தேசத்தின் ஒளியான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தேசத்தின் குரலாக ஈழமண்ணில் நிலை பெற்ற நாள்.

ஈழத்தமிழர்களின் சுதந்திர இயக்கத்தின்4, அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட தேசத்தின் ஒளிவிளக்கு எனத் தலைவரால் போற்றப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தேசத்தின் குரலாக பூதவுடல் விடுத்து புகழுடம்பு பெற்ற நாள்.

14 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த வரலாற்று மாற்றத்தின் விளைவாக இன்று வரை ஈழமக்கள் அந்தத் தேசத்தின் குரலே எங்கள் மண்ணுக்கான விடுதலைக்குரலாக நாம் ஏற்று நடக்க வேண்டிய குரல் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்குக் காரணம் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஈழமக்களின் உண்மை வாழ்வை, அந்த வாழ்வின் தேவைகளை, அந்தத் தேவைகள் அவர்களுக்கான பாதுகாப்பான அவர்களுடைய ஆட்சியில்தான் நடைமுறைச் சாத்தியமாகும் என்ற உண்மையை உலகுக்கு எந்த சத்திகளுக்கும் அஞ்சாது மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லிய அந்த உறுதி என்றால் மிகையாகாது.

இந்த உறுதியின் அடிப்படையில்தான் தேசத்தலைவர் அவர்களுக்கும் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் இடையில் நட்பு, பாசம் வளர்ந்தது என்பதை கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலம் ஆகிய நேரத்தில், அவருக்குத் தேசத்தின் குரல் என்ற பெருமதிப்பினை அளித்த நேரத்தில் தலைவர் கூறிய பின்வரும் வார்த்தைகள் எடுத்து விளக்குகின்றன.

“பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே இருந்த ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்து கொண்டு, எமது உறவு நல்லுறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும், செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம் தினம் நாம் பகிர்ந்து கொண்ட வாழ்வியல் அனுபவத்தில் வலிமை பெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு. அது பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மொபெரும் குடும்பத்தின் ஒரு மூத்த தலைமகனாகப் – பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றிந்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவியல்ல என்பதைக் கண்டு கொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்றுத் தினம் தினம் சாவுடன் போராடியபோதும், தாங்க முடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும் தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சைத் தொட்டு நின்றது.” என்பது தேசத்தலைவரின் இதயமொழி.

இந்த உறுதிப்பாடு தான் பாலாண்ணனை மக்களின் வாழ்வின் வரலாற்றின் உண்மைகளை சொல்லாக்கும், எழுத்தாக்கும், பேச்சாக்கும் பேராற்றலை அவருக்கு அளித்தது. இதுவே அவரை மூத்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக தேசத்தலைவரின் உற்ற நண்பனாக வாழ்வில் பரிணமிக்க வைத்தது. அவரை அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு மூலாதாரமாக முன்னின்று செயற்பட வைத்தது

அந்த வகையில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இராஜதந்திர ஆற்றுப்படுத்தலில் திம்புப் பேச்சுவார்த்தை மேசையில் பின்வரும் நான்கு தீர்மானங்கள் பங்கேற்ற தமிழர் தரப்பால் ஏகமனதாக முன்வைக்கப்பட்டது .

  1. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்
  2. தமிழ் மக்களுக்கு இனங்காணக் கூடிய தனித்துவமான தாயகம் உண்டு
  3. தமிழர் தேசத்திற்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு.
  4. சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமையும் மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டு

திம்புப் பேச்சுக்களில் தமிழர் தரப்பால் நிறைவேற்றப்பட்ட இந்த நான்கு அடிப்படைகளுமே இன்று வரை ஈழத்தமிழர் அரசியல் தீர்வுக்கான அடிப்படைத் தளமாக உள்ளது.

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தனது போரும் சமாதானமும் நூலில் “ஐ.நா. சாசனத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் சமஉரிமைகளும் மக்களது சுயநிர்ணயமும் என்ற விதிக்கு இணங்க எல்லா மக்களும் வெளிப்புறத் தலையீடு எதுவுமின்றி, தமது அரசியற் தகைமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும், தமது பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிகளைப் பேணுவதற்கும் உரிமை உடையவர்களாவர். இந்தச் சாசனத்தின் கட்டுப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு அரசும் இந்த உரிமைக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.

இந்த சுயநிர்ணய உரிமையானது வழமையான உள்ளீட்டாக அதாவது ஒரு அரச கட்டமைப்புக்கு உட்பட்டதாக நிறைவுபெற வேண்டும். சுதந்திரமான, இறையாண்மையுடைய அரசுக்களின் பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இப்பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் அதே வேளை பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை வலியுறுத்தும் அரசுக்கள் சில தகைமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறது இப்பிரகடனம். அதாவது எல்லா மக்களுக்கும் சமஉரிமைகளையும், சுயநிர்ணய உரிமையையும் வழங்கி, இன, மத வேறுபாடின்றி அந்நாட்டிலுள்ள மக்கள் சமூகத்தினர் அனைவரையுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசுக்கு மட்டுமே பிரதேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் தகுதியும் தகைமையும் உண்டு. என்கிறது இப்பிரகடனம்.

சுயநிர்ணய உரிமை குறித்த இவ்விளக்கங்களின் மூலம் பாலா அண்ணன் மிகத்தெளிவான முறையில் ஈழத்தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு பிரதேச ஒருமைப்பாடு என்கிற பெயரில் ஈழத்தமிழர்களை அடிமைப்படுத்தி ஆள அனைத்துலக சட்டத்தில் இடமில்லை என்பதையும் எடுத்து விளக்குகின்றார்.

இவ்வாறு தேசத்தின் குரல் இன்றும் ஈழமக்கள் உரிமைகள் மீட்புக் குரலாக, ஈழமக்களுக்குத் தெளிந்த அரசியல் வழிகளை விளக்கும் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகளின் தலைவராக உள்ளவர்கள் இக்குரலுக்குச் செவிகொடுத்து குரல் காட்டும் வழியில் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே இவர்களால் ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இவர்கள் பாலா அண்ணனின் நூல்களை ஆக்கங்களை படித்து, அதன் வழி நடப்பதே அவருக்கு ஒவ்வொரு ஈழத்தமிழனும் செய்யும் உயர் மதிப்பளிப்பாக அமையும். அதேவேளை பாலா அண்ணனின் நூல்களை, ஆக்கங்களைப் படிக்கையில் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தனது வரலாறு முதல் அரசியல் வரையான தெளிவான அறிவு வளரும். அந்த அறிவு தரும் உறுதி பாலா அண்ணன் போலவே அசையாத உறுதியுடன் எவர்க்கும், எதற்கும் அசையாது, வளையாது கொண்ட கொள்கையில் நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ சக்தி தரும்.

-அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here