வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு – கூட்டமைப்பும், இந்தியாவும் ஆடிய நாடகம்

சிறீலங்கா அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கடந்த வியாழக்கிழமை (10) இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

பாதுகாப்புக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை தமக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூர் பிரமுகர் ஒருவரை தொடர்புகெண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானது அல்ல. வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு ஆதரவானது என்பதற்காக கடந்த ஆட்சிக் காலத்தின் போதும் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போட்டுவரும் அரசின் வரவு-செலவுத் திட்டத்தை தமது கட்சி மௌனமாக ஆதரித்துள்ளது என்பதை அவர் கூறவில்லை. எனினும் மாகாணசபைக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் என்ன இடம்பெற்றது என்பதை அவர் இந்த கலந்துரையாடலில் கூறிவிட்டார். வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவு ஏற்கனவே புதுடில்லியில் எடுக்கப்பட்டு விட்டதுடன், அது தொடர்பில் கூட்டமைப்புக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சிறீலங்காவில் உள்ள இந்தியா கவுஸ் இல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்திருந்தார். அது மட்டுமல்லாது கூட்டமைப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு ஒன்றும் விரைவில் இடம்பெறவுள்ளது. இந்தியா மீண்டும் தனது பழைய கொள்கையை பயன்படுத்துகின்றது. தமிழ் மக்களின் அரசியலை பயன்படுத்தி சிறீலங்கா அரசுக்கு செய்தியை அனுப்ப முற்பட்டுள்ளது.

எனவே தமிழ் அரசியல் கட்சிகளின் பேச்சுக்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்களும், தேசியச் செயற்பாட்டாளர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டுள்ளது என அரசியல் அவதானி ஒருவர் இலக்கு மின்னிதழுக்கு தெரிவித்துள்ளார்.