மருதனார் மடத்தில் ஓட்டோ சாரதிக்குக் கொரோனா – எழுமாற்றான பரிசோதனையில் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

மருதனார்மடம் சந்தையில் கடை வைத்திருக்கும் குறித்த நபர் ஓட்டோ வைத்திருக்கின்றார் எனவும், ஓட்டோ சாரதிகளுக்கு நேற்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, இன்று மருதனார்மடம் பகுதியில் மீளவும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய தொற்றாளர்கள் குறித்து யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதித.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் –

“நேற்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். மருத்துவபீடஆய்வுகூடத்தில் 363 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் மருதனார்மடத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அதேவேளை, வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுப் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு கொரோனாத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.