இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தரவுகளின் அடிப்படையில் 95 ஆயிரத்து 825 பேர் வீடுகளின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரம் தம்மிக பண்டார அறிமுகப்படுத்திய மருந்தைக் கொண்டு கொவிட்-19க்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியுமானால் அதற்கு தனது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது.
இந்த மருந்து வெற்றிகரமாக இருந்தால் அது நாட்டுக்கு பெருமையையும் கௌரவத்தையும் தரும் என அச்சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
வைரஸுக்கு எதிராக இந்த மருந்து வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால் அது ஒரு வெற்றியாகும் எனவும் இவ்வைரஸுக்கு சிகிச்சையளிக்க சுதேச மருந்தைப் பயன்படுத்துவதற்கு மேலைத்தேய மருத்துவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் மருத்துவர் அளுத்கே மேலும் கூறினார்.



