வெடியரசன் கோட்டை அபகரிப்பை நிறுத்துங்கள் – சிறிதரன் எம்.பி. சபையில் வலியுறுத்தல்

நெடுந்தீவுப் பகுதியில் உள்ள வெடியரசன் கோட்டையை தனது திணைக்கள உடமையாக்கி தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள காணி அபகரிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும்போதே மேற்படி கோரிக்கையை அவர் விடுத்தார். நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டை என்பது தமிழ், பெளத்த அரசன் வாழ்ந்த இடம். இந்தக் கோட்டை அமைந்ததன் காரணமாகவே அந்த இடம் கோட்டைக்காடு என அழைக்கப்படுகின்றது.

இந்தக் கோட்டையானது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாவது கிராம சேவகர் பிரிவான ஜே/01 இல் அமைந்துள்ளது. அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச இதழை இரத்துச் செய்து அபகரிப்பை நிறுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கை மூலம் வெடியரசன் கோட்டைப் பகுதி பெளத்த சின்னமாகக் காண்பித்து ஆக்கிரமிக்கப்படவுள்ளது. இங்கே இதனோடு தொடர்புடைய அமைச்சரும் இருப்பதனால் இதற்குரிய தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்” என்றார்.