அரசியல் கைதிகளின் விடுதலை தற்போதைய அரசின் கீழ் சாத்தியப்படாது – அருட்தந்தை சக்திவேல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்பது தற்போதைய அரசாங்கத்தின் கீழ்சாத்தியப்படாது. எனவே இதுவிடயத்தில் வெளிநாட்டு சக்திகளுடனும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் பேச்சுகளை நடத்துவதற்குத் தயாராகி வருகின்றோம் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியுள்ள போதிலும், அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில, அரசியல் கைதிகள் என்று எவரும் நாட்டின் சிறைச்சாலைகளில் இல்லை என்று கூறியுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவைவருமாறு:-

“அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஆளுந்தரப்பின் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். எனவே இந்த நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோதே, அரசியல் கைதிகள் எவருமில்லை என்று உதயகம்மன்பில கூறியிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதேபோன்று அரசியல் கைதிகள் எவருமில்லை என்று முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

அதேவேளை தற்போதைய அரசாங்கம்தேர்தல் பிரசாரத்தின்போதே இந்த நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை என்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளே இருக்கின்றன என்றுமே கூறிவந்தது. ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் சிந்தனையைப் பிரதிபலிக்கும் விதமாகவே தற்போது உதயகம்மன்பில மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்பது தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சாத்தியப்படாது என்பது தெளிவாகின்றது. ஆகவே இந்த விடயத்தில் வெளிநாட்டு சக்திகளுடனும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் பேச்சுகளை நடத்துவதற்குத் தயாராகி வருகின்றோம்” என்றார்.