தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம் – சம்பந்தன்

‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நல்ல செய்தி வரும் என்று நாம் காத்திருக்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தமிழ் அரசியல் கைதிகளை ஆளும் தரப்பிலுள்ள சிலர் இனவாத ரீதியில் பார்ப்பது வேதனை தரும் விடயமாகும். இது தொடர்பில் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களைத்தான் நாம் ‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்கிறோம். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அவர்களின் விடுதலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். அந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நல்ல செய்தி வரும் என்று நாம் காத்திருக்கின்றோம்” என்றார்.