தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்க முடியும்

நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா, தமிழகத்தில் உள்ள புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா அவர்கள் ‘இலக்கு’இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் வடிவம்.

கேள்வி- பெண்களுக்கெதிரான வன்முறைகளை எத்தனை விதமாக வகைப்படுத்தலாம்?

97674 1 1 தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்க முடியும்

பதில் – பொதுவாக அமைப்பு ரீதியான வன்முறைகள். இந்த சமூகம் ஒரு ஆணாதிக்க அமைப்பாக பெண்ணின் மீது நிகழ்த்தகூடிய வன்முறைகள். மதம் போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி நடத்தக்கூடிய அல்லது மத ரீதியாக நடத்தக்கூடிய வன்முறைகள். குடும்பம் என்ற அமைப்பைப் பயன்படுத்தி நடத்தக்கூடிய வன்முறைகள். இவையெல்லாம் அமைப்பு ரீதியான வன்முறைகள். இவற்றைப் பெரும்பாலும் பெண்கள் புரிந்து கொள்வதில்லை. வன்முறை என்றால், அவர்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற உடல் ரீதியான வன்முறை தான் பெரிதும் பேசப்படுகின்றது. இந்த அமைப்பு ரீதியான வன்முறைகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. ஆணுக்குக் கட்டுப்பட்டு பெண் இயங்க வேண்டும். அது தான் இயற்கை. அது தான் இயற்கையான படைப்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலான வன்முறைகள். நேரடியாகச் சொல்வதானால்,

கருத்தியல் ரீதியான வன்முறை – அமைப்பு ரீதியாக செயற்படுகின்றது.

நேரடியாக பெண்களின் உடல் மீது செலுத்தப்படுகின்ற வன்முறை– தனிநபர்கள் வழியாக செயற்படுகின்றது.

கேள்வி – இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சிறுமிகளின் மீதும் கூட வன்முறைகள்; குறிப்பாக பாலியல் வன்முறைகள் செயற்படுத்தப்படுகின்றன?

பதில் -இவற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், உலகம் முழுவதும் பெண்ணடிமை இருக்கின்றது. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் குறிப்பாக, இந்துமத ஆளுகை என்பதும், இந்துமத கருத்தியல் என்பதும் பெண்மீதான வன்முறைக்கு கூடுதலாக காரணமாகின்றது. இது தான் இந்த நாடுகளில் பெண்கள் மீதான வன்முறை  அதிகமாவதற்கான காரணம் என்று நான் கருதுகின்றேன்.

மிகச் சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் ஒரு மதக் கருத்தியலுக்கு ஆட்படுத்தப்பட்டு, அந்த மதக் கருத்தியலுக்கு உட்பட்டுத் தான் வளர்க்கப்படுகின்றார்கள். உதாரணமாக கிராமப்புறங்களில் பார்த்தால், சிறிய குழந்தைகளை சாமியாடுதல் போன்ற பழக்கத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இது ஒரு உச்சபட்ச உதாரணம். தவிர, நிறைய விரதங்கள், பண்டிகைகள் போன்றவை பெண்களை வன்முறைக்கு தயார்ப்படுத்துகின்ற ஒரு விடயம் தான். சுமங்கலி பூசையை எடுத்துக் கொண்டால், கணவனுக்கு முன்னரே தான் இறந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொள்வது தான் சுமங்கலி பூசை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், பெண் என்பவள் சிறுமியாக இருந்தாலும் சரி, பெரியவளாக இருந்தாலும் சரி, ஆண்களுக்கான ஒரு பண்டமாகவே பார்க்கப்படுகின்றாள். அந்தப் பார்வையின் அடிப்படையில் தான் இந்த வன்முறைகள் நடக்கின்றன.

இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல. உலகில் பல நாடுகளிலும் வன்முறைகள் நடக்கின்றன. ஆனால் இது போன்ற காரணங்களினால் தான் இலங்கையிலும், இந்தியாவிலும் வன்முறைகள் நடக்கின்றன என கூற விரும்புகின்றேன்.

இந்த சமூகம் ஒரு பெண்ணை குழந்தையாகப் பார்ப்பதில்லை. இதிலிருந்து தான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. ஒரு பத்து வயது பெண் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது என்றால், அங்கு வயது பிரச்சினையில்லை. அவள் ஒரு பெண் குழந்தை. மானம் தான் முக்கியம். அந்தப் பெண்ணை அம்மா சரியாக வளர்க்கவில்லை. அல்லது அவளை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று கூறுவர். ஒரு பதினெட்டு வயது பெண் மீது வன்முறை நிகழும் போது, அந்தப் பெண் ஒழுக்கமற்றவள் என்று இந்த சமூகம் கூறுகின்றது.  பாலியல் வன்முறை தான் உச்சபட்ச வன்முறை என்ற கருத்தியல் உள்ளது.  இதுவும் ஒரு கருத்தியல் வன்முறை தான்.

ஒரு ஆணுக்கு கை, கால்கள் வெட்டப்பட்டுள்ளது என்றும், ஒரு பெண்ணிற்கு பாலியல் வன்முறை ஏற்பட்டதும் என்று பார்க்கும் போது. இதில் ஆணுக்கு கை, கால் வெட்டப்பட்டதையே கூடதலான வன்முறை என நான் பார்ப்பேன்.

கேள்வி – பெண்களுக்கான உரிமைகள், மனித உரிமைகள் பற்றிய நமது கோரிக்கைகளை உரத்துச் சொல்லப்படுகின்ற காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இருந்தாலும் ஏன் பெண்கள் மீதான வன்முறைகள் நிகழ்கின்றது?

அதாவது பெண்கள் மீது வன்முறைகள் நிகழ்வதாலேயே பெண்கள் உரிமைகள் பற்றிப் பேசுகின்றோம். பெண் உரிமைகள் பற்றிப் பேசுவதால், காலங்காலமாக பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் ஒரே நாளில் நின்று போகும் என நாங்கள் நினைத்துவிட முடியாது. ஒரு சமூகத்தினுடைய  விழிப்புணர்வின் அடையாளமாக, அதன் முகமாக, மனிதர்கள் வன்முறையை வெறுக்க வேண்டும். வன்முறையைத் தவிர்த்து வாழ வேண்டும் என்ற ஒரு சர்வதேசக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. இவற்றில் நாங்கள் முழு முயற்சி அடையவில்லை என்பதைத் தான் தற்போது தொடரும் வன்முறைகள் காட்டுகின்றது என நான் நினைக்கிறேன்.

கேள்வி – பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சர்வதேச சட்டநியமங்கள் என்ன?

பதில் – பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான சர்வதேச சட்டங்கள் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  அப்படி இருக்க வாய்ப்பும் இல்லை. ஏனெனில், சர்வதேச சட்டங்கள் என்று எதுவும் இல்லை.  பல நாடுகளுக்கிடையில் சர்வதேச உடன்படிக்கைகள் என்று இருக்கின்றது.  இதில் உறுப்பு நாடுகளை பரிந்துரைக்கலாம். சர்வதேச சட்டங்களை பின்பற்றாத நாடுகள் மீது நடவடிக்கை எடுத்ததாக இல்லை.

சர்வதேச அளவிலான விசாரணைகள் நடைபெறுவதான தோற்றங்கள் தான் தற்போது உருவாகியிருக்கின்றதே தவிர, அப்படியான விசாரணைகள் முழுமையாக நடந்திருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை. உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி, போரின் தன்மை பற்றிய உறுதிப்பாட்டிற்குக்கூட பன்னாட்டு நிறுவனங்களால் இதுநாள் வரையிலும் வரமுடியவில்லை.  அதாவது விசாரணைகளின் மிக அரிதான விடயங்களைக்கூட அவர்களால் இறுதி முடிவெடுக்க முடியவில்லை. ஆனால் முயற்சிகள் நடப்பதாகவே நான் பார்க்கிறேன். சர்வதேச அளவில் நாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு பொது மன்றமாக ஐ.நா. மன்றமோ, அப்படிப்பட்ட ஒரு அமைப்போ உருவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்.

பொருளாதார ஒப்பந்தங்களின் அடிப்படையில்  பயந்து தான் சில நாடுகள் இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லலாமே தவிர, சர்வதேச சட்டங்கள் யாரையும் கட்டுப்படுத்த முடியும் என நான் நினைக்கவில்லை. அப்படியும் இல்லை. ஒரு பொதுவான நிலையில், அப்படியிருக்கும் போது, பெண்களுக்கு எதிராக என்ன சட்டங்கள் இருக்க முடியும். ஒரு நாட்டிலும் நீதி கிடைக்கவில்லை என்பதற்காக சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியுமா என்பது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத, ஒரு கோட்பாட்டளவில் உள்ள விடயமாக இருக்கின்றன.

சமூகமா, சட்டமா பெண்களுக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற கேள்வியை எழுப்பினால், சட்டம் தான் ஆதரவாக இருக்கின்றது. ஒவ்வொரு வன்முறை நிகழும் போதும் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படும். ஆனால் கடுமையான சட்டங்களால் அல்ல. தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறையை குறைக்க முடியும். ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து விடுபட்ட பெண்ணிய சிந்தனையுள்ள பார்வை வேண்டும். அண்மையில்கூட மதுரை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு. பாலியல் வன்முறை செய்தவனை திருமண வயதை அடைந்தவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தீர்ப்புக் கொடுத்திருக்கின்றார்கள். இது எவ்வளவு அதிர்ச்சி தரக்கூடிய விடயமாக உள்ளது. இங்கு பார்த்தால், நீதிபதியினுடைய பார்வை தான் பிரச்சினை, பாலியல் வன்முறை குறித்தும், ஆண் பெண் குறித்தும், திருமண வயது குறித்தும். பெண் மீது என்ன சிந்தனை உள்ளது என்பதும் தான் இங்கு பிரச்சினை.

குறைவான சட்டங்களே போதும். கடுமையான சட்டங்கள் என்பது ஒரு குரூரமான கோரிக்கை. ஒழுங்குபடுத்துவதற்குத் தான் சட்டங்கள். சட்டங்கள் ஒழுங்குபடுத்தினாலே குற்றங்கள் குறைந்துவிடும். தண்டனை வேண்டும். ஆனால் அந்த தண்டனையை கடுமையாக்கித் தான் பெண் மீதான வன்முறையை குறைக்க வேண்டும் என்ற பார்வையானது, எந்த அனுபவப் பின்புலமும், ஆதாரப் பின்புலமும் இல்லாதது. பெண் மீதான பார்வையை மாற்றக்கூடிய சட்டங்கள் வேண்டும். அதன் மூலமாகவே நாங்கள் இந்த விடயங்களை வெற்றி கொள்ள முடியும். தண்டனைச் சட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து எனக்கு இல்லை. பாலியல் வன்முறைகளை குறைக்கும் போது தான், பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களைக் காப்பாற்ற முடியும் என்று நீதிபதிகளே கூறியிருக்கின்றார்கள். இன்று பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதற்கான காரணங்களை நாங்கள் யோசனை செய்ய வேண்டும். பாலியல் ரீதியான வன்முறை நிகழும் போது தான் இந்த சமுதாயம் குரல் கொடுக்கின்றது. அதற்குப் பின்னாலும் இந்தக் கருத்து சார்ந்த கருத்தியல் உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே சட்டம் எப்படியிருந்தாலும், அந்தச் சட்டத்தை எடுத்து ஆளக்கூடிய நீதிமன்றங்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், காவல்துறையினர் அடங்கிய குழுவிற்கு ஆணாதிக்கப் பார்வையிலிருந்து விடுபடக்கூடிய பயிற்சிகள் வழங்கி, அதற்குரிய ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்க வேண்டும்.