ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து அரசுக்குத் தெரியும் – சரத் வீரசேகர

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் தொடர்பாக அரசுக்குத் தெரியும். அது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சியால் கடந்த (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு –

“ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 257 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 86 பேருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஊடாக நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்று திங்கட்கிழமை, இந்த விடயம் தொடர்பாக நீதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து, வழக்கு விசாரணைகளை மேலும் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன். அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயத்தில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஆகவே, இந்த விடயத்தில் சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுப்போம். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறை சிறந்த முறையில் இல்லாதமையாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் தொடர்பாக அரசுக்குத் தெரியும். ஆனால் தற்போது அந்த இரகசியத்தை வெளியிடமுடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.