எங்கே விட்டோமோ அங்கிருந்துதொடங்குவோம்- சிலம்பு

முள்ளிவாய்க்கால் பேரழிவும், ஆயுத மௌனிப்பும் இடம் பெற்று பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டது. அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப் போராட்ட நிலையில் நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப்போராட்டங்கள் மூலமும் தமிழினம் தனது உரிமைகளைப் பெற முயன்று தொல்வியடைந்த நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினார்கள்.

ஆயுதப் போராட்டம் முகிழ்ந்த போது தான்1976 இல் மேத் திங்களில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களின் இரு பெரும் கட்சிகளான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் இணைந்து வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றின. இவ்விரு கட்சிகளின் தலைவர்களான ஜீ. ஜீ. பொன்னம்பலமும், தந்தை செல்வா என அழைக்கப்பட்ட சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களும் விடுதலைக் கூட்டணியின் இணைத் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இத் தலைவர்கள் அடுத்தடுத்துச் சாவைத்  தழுவிய பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மு. சிவ சிதம்பரத்தைத் தலைவராகவும் அ. அமிர்தலிங்கத்தைச் செயலாளராகவும் கொண்டு தனித் தமிழீழ இலட்சியத்தை வைத்து 1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்தனர். த. வி. கூட்டணிக்கு மக்கள் தேர்தலில் பெரு வெற்றியைக் கொடுத்தனர். அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குத் தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்கினர்.

அத்தேர்தல் மூலம் 1972 இல் சிறீமாவோ கொண்டு வந்து நிறைவேற்றிய குடியரசு யாப்பும், 1978 இல் ஜே. ஆர். கொண்டு வந்து நிறைவேற்றிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசு யாப்பும் சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தன.

images எங்கே விட்டோமோ அங்கிருந்துதொடங்குவோம்- சிலம்பு

1972 யாப்புத் தயாரிக்கப்பட்ட பொழுது முப்பத்திரண்டு திருத்தங்களைத் தமிழரசுக் கட்சியும், தமிழ் மக்களின் ஒற்றுமையால் ஏற்பட்ட தமிழர் கூட்டணியின் பெயரிலும் தந்தை செல்வா அரசியல் யாப்பு அவையில் முன் வைத்த பொழுது, அவையனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் தந்தை செல்வா இலங்கைத் தமிழரசுக் கட்சி இனிமேல் இவ்வரசியல் யாப்பு அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டாது என்று கூறிவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவ்அரசியல் யாப்பு அவை தமிழ் மக்களின் பெரும்பான்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பங்குபற்றுதலின்றியே கூடி, அரசியல் யாப்பை நிறைவேற்றினர்.

இதே நேரத்தில் சிங்கள மக்கள் ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஆணை வழங்கினர். ஜே. ஆர். இந்தப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு “சிறீலங்கா ஜனநாயகச் சோஷலிச குடியரசு” என்ற பெயரில் நிறைவேற்று அதிகாரங்கள் நிறைந்த அரசியல் யாப்பை நிறைவேற்றித் தானே முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக 1978 இல் பதவி ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு தமிழ் மக்களின் சம்மதமோ ஒப்புதலோ இன்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பு ஆனது தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தாது என்பதை மு. திருச்செல்வம் கியூ. சி. பின்வருமாறு கூறுகிறார்.

1615 இல் ஒல்லாந்தரிடம் இழந்த இறைமையை தமிழ் மக்கள் 1972 மே 22 இல் மீண்டும் பெற்றுக்கொண்டு விட்டனர். தமிழ் மக்களுக்கு மீண்டும் இறைமை கிடைத்து விட்டது. ஆனால் நாடு தான் இல்லை.இது உலகில் ஒரு புதுமையான நிகழ்வு என்று கூறியுள்ளார்.

இது அவர் வழக்கு மன்றத்திலே வைத்த வாதமாகும். இது தான் உண்மை நிலையாகும். 1977 இல் தமிழ் மக்கள் கொடுத்த ஆணையைப் பொறுத்துக் கொள்ளாத ஜே. ஆரின் ஆட்சி 1977 இல் ஒரு இனப்படுகொலையை தேர்தல் முடிந்தவுடன் அரங்கேற்றியது. தமிழ் மக்கள் இரண்டாவது முறையாகத் தென்னிலங்கையில் இருந்து கப்பல்கள் மூலம் தமிழர் தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் எதிர் வினையாகத் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டச் சிந்தனை மேலும் கூர்ப்பு அடைந்து.

பலஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றன. 1977 ஐத் தொடர்ந்து 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் மேலும் இனப்படுகொலைத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 1983 இல் நடந்த கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதல் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் நேரடித் தலையீட்டிற்கு வழிசெய்தது.

இந்தியாவில் வைத்து ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயுதக் குழுக்கள் பின் நாட்களில் எதற்காக ஆயுதம் ஏந்தினார்களோ அதற்கு முற்றிலும் எதிராக விடுதலைக்காகப் போராடியவர்களையும், விடுதலையை விரும்பயவர்களையும் வேட்டையாடினர் என்பதும் வரலாறாகும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பே பெரும் காரணியாக இருந்தது.

1983 இல் இந்திரா காந்தியின் நேரடித் தலையீடு தமிழ் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்திருந்தாலும், அவர் கொல்லப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில்பெரும் மாற்றம் ஏற்பட்டது.

ராஜீவ் காந்தியின் காலத்தில் தான் இலங்கை அரசுக்கும், தமிழ் மக்களுக்குமிடையே பூட்டான் தலைநகரின் திம்புவில் பேச்சுவார்த்தை இடம் பெற்றன. தமிழர் தரப்பின் விடுதலைப் புலிகள், டெலோ,புளொட், ஈபி ஆர் எல் எப், ஈரோஸ் ஆகிய அமைப்புகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் பேச்சில் பங்குபற்றின.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் விருப்புகளை நிறைவேற்றக்கூடிய எத்தகைய தீர்மானங்களையும் ஏற்காமல், தமிழர் தாயகத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தியது. அதனால் திம்புப் பேச்சு என்பது தோல்வியில் முடிந்தது. அப்பொழுது போராளிகளாலும், தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் முன் வைக்கப்பட்ட கோட்பாடுகள் திம்புத் தீர்மானங்கள் என்று வரலாற்றில் கூறப்படும் தீர்மானங்களாகும்

1985 யூலை 13 இல் வைக்கப்பட்ட திம்புத் தீர்மானங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன

  1. இலங்கைத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தல்
  2. இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இனம் காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்ளல்.
  3. தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
  4. இத் தீர்வைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழர்களினதும் பிரசா உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.

என்பனவே நான்கு முக்கிய அம்சங்களாகும்

இவற்றை ஜே.ஆர். அரசு ஏற்காத நிலையில், தமிழ்ப் பேச்சு முறிவடைந்தது. இதன் பின்னர்  1987இல் தமிழ் மக்களின் பங்குபற்றுதலும், ஒப்புதலும் இன்றி ஜே.ஆர். ராஜீவ் ஒப்பந்தம் என்ற பெயரில் திம்புக் கோட்பாடுகளுக்கு அமைவில்லாத மாகாணசபை முறைமைகள் தமிழ் மக்கள் மேல் திணிக்கப்பட்டதும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான போர் நடைபெற்றதும் நிகழ்ந்தன.

இலங்கையில் ஐ.தே.கட்சி ஆட்சி மறைந்து, சந்திரிகா ஜனாதிபதியாகியதும், அவர் சமாதானத் தேவதை போல் காட்சியளித்ததும், பின்னர் போரைத் தீவிரமாக்கி யாழ்ப்பாணக் குடா நாட்டைக் கைப்பற்றியதும் நடந்தன. ஆட்சிக்கு வந்தவுடன் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காண்பேன் என்று கூறியவர், பின்னர் தான் முதலில் கூறிய அதிகாரங்களையே குறைத்துக் குறைத்து ஓர் அரைவேக்காட்டுத் தீர்வைத் தமிழ் மக்கள் மேல் திணிக்கவும், போரை வலுப்படுத்தவுமே அவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவர் சனாதிபதியாக இருந்த போது தான் ஐ.தே.கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்க வந்தார். அதன் பின்னர் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுத் தொடங்கிப் பல்வேறு இடங்களில் தொடர்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் ஒஸ்லோ உடன்பாடு என்ற ஒன்று பேசப்பட்டு வந்தது.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒஸ்லோ நகரில் பேசும் பொழுது கருத்துடன்பாட்டில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு பிரேரணைக்குப் பதிலாக தமிழ் பேசும் மக்கள் வரலாற்று பூர்வமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி முறையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கொண்டனர்.

இத்தகைய தீர்வு எல்லாச் சமூகத்தினருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதையும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் மத்திய அரசிற்கும் பிராந்தியத்திற்கும், பிராந்தியத்திற்கும் மத்திய அரசிற்குமான பொது அதிகாரப் பங்கீடு, புவியியல் பிரதேசம், மனித உரிமைகள், பாதுகாப்பு, அரசியல் நிர்வாகப் பொறிமுறை, பொது நிதி, சட்டம் ஒழுங்கு உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் தொடர்பான உரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என்று இரு தரப்பினரும் உடன்பட்டுக் கொண்டதாகக் கூறுகிறது.

இதனையே ஒஸ்லோ பிரகடனம் என்று கூறுகின்றனர். உண்மையில் ஒஸ்லோ பிரகடனம் என்பது ஒரு கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை அல்ல. பேச்சின் பொழுது எட்டப்பட்ட உடன்பாடே ஆகும்.

இவ்வுடன்பாடு ஒரு ஏமாற்று வேலை என்றும், புலிகளின் இலட்சியங்களுக்கும் திம்புக் கோட்பாடுகளுக்கும் எதிரான ஒரு பொறி எனவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என்றும் ஊடகவியலாளர் டி.சிவராம் கூறியிருந்தமையும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

தன் பின்னர் இலங்கை அரசு இடைக்காலத் தன்னாட்சி அலகு என்ற ஓர் அமைப்பை உருவாக்குவது பற்றிய அறிவிப்பை அறிவித்தது. அது முற்றிலும் ஏமாற்றம் அளிப்பதாகப் புலிகள் நம்பினர். அதன் பின்பு ‘இடைக்கால தன்னாட்சி அதிகாரம்’  என்ற யோசனையை புலிகள் முன்வைத்தனர்.

கால இழுத்தடிப்பு, சனாதிபதி சந்திரிகாவிற்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி என்பவற்றால் மேலும் இதைக் கொண்டு செல்ல முடியாமல் போனது.

இதன் பின்னர் இராசபக்ச அரசின் வருகையும் பின்னர் போர் உக்கிரமடைந்து மே 2009 இல் மிகப் பெரிய இனப்படுகொலையுடன் விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புடன் ஒரு முடிவிற்கு வந்தது. ஆனால் ஈழத் தமிழினத்தின் உரிமைகளுக்குப் போரில் இலங்கை அரசுக்கு உதவிகள் புரிந்த நாடுகள் எவையும் உத்தரவாதம் அளிக்காத நிலைமையே இன்று வரை தொடர்கிறது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உறுதியான, நியாயமான தீர்வு பற்றிச் சிந்திக்காது கூட்டமைப்பைத் தலைவர் சுட்டிக்காட்டப்பட்ட அரசியல் தலைமை என்று கூறிக்கொண்டு அரசியல் செய்து வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்து வருகின்றதே அல்லாமல் ஒரு தீர்க்கமான தீர்வை நோக்கித் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ளவில்லை. தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. போரை நடத்திய பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராசபக்சா சனாதிபதியாகவும், பிரதமராக மகிந்த ராசபக்சாவும் ஆட்சியில் உள்ளனர்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை பத்தொன்பதாவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் சனாதிபதிக்குக் கொடுத்ததுடன், மேலும் இதுவரை இல்லாத ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரத்தையும் சனாதிபதிக்கு வழங்கி நிறைவேற்று சனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.

அடுத்து புதிய அரசியல் யாப்பு ஒன்று தயாரிக்கப்படும்  என்று அறிவித்து அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழ் மக்களுக்கு இது ஒரு பெரும் நெருக்கடியான காலமாகும்.

சென்ற ஆட்சியும் புதிய அரசியல் யாப்பைத் தயாரித்து வரைவு அறிக்கை வரை சென்றிருந்தது. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதுடன், ஒற்றையாட்சி நாடென்று வலியுறுத்தியிருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது ஒற்றையாட்சி அல்ல. ஒருமித்த நாடு என்ற பொய்யான விளக்கம் கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்றியது. அத்துடன் நில்லாது தமிழர் தாயகத்தை பிளவுபடுத்தும் மாகாண சபைகளுக்கே அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் ஏற்றிருந்தது. ஆனால் சமஸ்டி என்ற பெயர் இல்லாவிடினும் அங்கே சமஸ்டி மாற்றத்தால் அந்த வரைவு காணாமல் போய்விட்டது. இனி வரப்போகும் அரசியல் யாப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்தும் ஒன்றாகவே அமையும்.

இலங்கை என்பது பௌத்தர்களின் தொன்மையான நாடு என்றும், சிங்கள பௌத்தமே இந்த நாட்டின் தொன்மையான சமயம் என்பதையும் நிலைநாட்டக்கூடிய யாப்பாகவே அமையப் போகிறது. அதற்கான செயலணிகளே றிறுவப்பட்டுள்ளன.

இது மிகப் பெரிய ஆபத்தைத் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப் போகின்றது என்பதற்கு இரு கருத்துக்களுக்கு இடமில்லை.

முள்ளிவாய்க்கால் வரை வீரத்துடனும் உறுதியுடனும் நின்ற தமிழினம் இனி எதில் தொடங்குவது. முதலில் இருந்தா தொடங்குவத என்று சிந்திக்கக் கூடாது. கடந்த காலத்தைப் பார்க்கும் பொழுது கண்ணில் தெரிவது திம்புக் கோட்பாடுகளும், ஒஸ்லோ உடன்பாட்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் முன் வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைகளுமே ஆகும்.

திம்புக் கோட்பாடு என்பது அப்பொழுது ஆயுதம் ஏந்திய முக்கிய போராட்ட அமைப்புகளும், அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும் வைத்திருந்த தீர்வுத் திட்ட அடிப்படையாகும்.

எனவே சாக்குப் போக்கு எதுவும் கூறாமல் அடியைத் தமிழினம் திம்புக் கோட்பாட்டின் நிலையில் வலுவாக நின்று எடுத்துச் செல்ல வேண்டும். அதனைத் துணிவுடன் மேற்கொள்வதே ம மண்ணுக்காக உயிர் நீத்தவர்களின் கனவை நனவாக்கும்.

முன்னாள் அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா தனது ஆட்சிக் காலத்தில் என்ன செய்திருந்தாலும் இன்று தமிழீழத்தின் இனப்படுகொலையை ஐ.நா. தடுக்கத் தவறிவிட்டது என்று இப்போது தனது நூலில் எழுதியுள்ளார். இது வெறும் பேச்சல்ல. நூலிலேயே பதிவு செய்துள்ளார்.

ஒபாமா ஆட்சியில் இருந்த பொழுது எவ்வாறு நடந்து கொண்டார். இப்பொழுது காலம் கடந்த ஞானம் வந்துள்ளதா என்று சிலர் கூறுவது தெரிகின்றது. அதற்காக அவர் இப்பொழுது பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொள்வது தவறான செயலாக இருக்க முடியாது. அதே நேரம் உலக நடப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறன.

தமிழ் மக்களின் பிரச்சினையை வைத்து மற்ற நாடுகள் பயன்பெறாமல், அந்நாடுகளின் செயல்கள் தமிழர் நலன் சார்ந்ததாக இருக்கவும், பயன் கொடுப்பதாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் அரசியல் தலைமைகளின் பாரிய பொறுப்பாகும்.

அரசியல் யாப்பு அவைக்குச் சென்று எமக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து தாருங்கள் என்று பேசிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதால் பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை.

எனவே புதிய பாதையைத் தேடிக் கொண்டிராமல் எங்கே விட்டோமோ அந்தத் திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வை நோக்கி பயணிப்பதே தமிழர் தரப்பினருக்கு ஏற்ற வழியாகும்.