வடமாகாணத்தில் 84 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

வடமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில் 84 நோயாளர்கள் ஊழுஏஐனு – 19 தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பார் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இதில் மார்ச் மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபர் மாதம் 39 நோயாளர்களும் நவம்பர் மாதம் 27 நோயாளர்களும் டிசம்பர் மாதம் இன்றுவரை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13 பேரும் யாழ் மாவட்டத்தில் இருந்து 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 2 பேருமாக மொத்தம் 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் PCR பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மேலதிகமாக அவசியம் ஏற்படும்போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் உள்ள ஆய்வுகூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

வடமாகாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் ஒக்டோபர் மாதத்தில் 7124 PCR பரிசோதனைகளும் நவம்பர் மாதத்தில் 8069 PCR பரிசோதனைகளும் கொழும்பு அனுராதபுரம் ஆய்வுகூடத்தில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் COVID 19 சிகிச்சை நிலையங்களாக மருதங்கேணி வைத்தியசாலை, கோப்பாய் கல்வியற் கல்லூரி மற்றும் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மாகாண தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியன இயங்கிவருகின்றன. இதில் மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் தற்பொழுது 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.