மிருசுவில் படுகொலை படை அதிகாரிக்கு மரணதண்டனை உறுதி

2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற மக்கள் 8பேரை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்து கழிப்பறைக் குழிக்குள் போட்டிருந்தனர்.

இந்தச் சம்பத்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படை அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தப்பிச் சென்ற மகேஸ்வரன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஏனைய நான்கு பேரும் போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தீர்ப்பிற்கு எதிராக சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த விசாரணை தலைமை நீதிபதி நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர் குழுவினால் விசாரிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே என ஐந்து நீதிபதிகளும் அறிவித்துள்ளனர்.