இறுதி வேளையில் சம்பந்தனை அழைத்துப் பேசிய டோவால் – பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு

134
304 Views

முத்தரப்புப் பாதுகாப்புப் பற்றிய பேச்சுக்களுக்காக கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நேற்று நாட்டை விட்டுப் புறப்படவிருந்த சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து மூடிய அறைக்குள் சுமார் முப்பது நிமிட நேரம் பேச்சு நடத்தினார்.

அஜித் டோவலின் கொழும்பு நிகழ்ச்சி நிரலில் முன்னர் அறிவிக்கப்படாத இந்தச் சந்திப்பு சத்தம் சந்தடியின்றி நேற்று நடைபெற்றிருக்கின்றது. அஜித் டோவல் கொழும்பை விட்டு நேற்று புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்துக்கு சம்பந்தனை அழைத்து அவருடன் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார்.

இந்தப் பேச்சுகள் இடம்பெற்றமையை சம்பந்தனும் உறுதிப்படுத்தினார். “இலங்கையின் அபிவிருத்தி, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்படப் பல விடயங்கள் குறித்தும் பேசினோம்” என்றார் அவர்.

இலங்கை – மாலைதீவு – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே இந்தியத் தரப்பு வெளியிட்டிருந்தது.

இலங்கைப் பிரதமர், இலங்கை ஜனாதிபதி, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் ஆகியோருடனான சந்திப்புக் குறித்தெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சம்பந்தனுடனான சந்திப்பு முன்னர் குறித்தொதுக்கப்படவில்லை. திடீரென – கடைசி நேரத்தில் – டோவல் புதுடில்லி புறப்படுவதற்கு முன்னர் அது நடைபெற்றிருக்கின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினைக் கான தீர்வு எத்தனம், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி ஆகியவை குறித்தெல்லாம் இந்தப் பேச்சில் ஆராயப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here