தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் வரலாறு மீண்டும் திரும்பும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் அனைத்துலக சட்டவிதிகளின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் அல்லது வரலாறு மீண்டும் திரும்பலாம் என முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக மன்னிப்புச் சபை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னரும் சிறீலங்காவில் வன்முறைகள் தொடர்கின்றன.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக சிறீலங்கா அரசு நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் உறுதிவழங்கியிருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன.

இதுவே தற்போது இனங்களுக்கு இடையில் அதிகரித்துவரும் முரன்பாடுகளுக்கான காரணம். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மறுத்தது தான் தற்போது முஸ்லீம் இனத்தவர் மீதான தாக்குதலுக்கும் காரணம்.

kepapulavu4 தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் வரலாறு மீண்டும் திரும்பும்: அனைத்துலக மன்னிப்புச் சபைஇனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக சிறீலங்கா தெரிவித்துவரும் போதும், சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மீண்டும் வன்முறைகள் தோற்றம் பெற்றுவருவது கவலை தருவதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் தென் ஆசியப் பணிப்பாளர் பிராஜ் பற்நெக் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் என்நலிகொட காணாமல் போயிருந்தார். 26 வருடங்கள் இடம்பெற்ற போர் நிறைவு பெற்ற பின்னர் இது இடம்பெற்றுள்ளது. 1980 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 60,000 தொடக்கம் 80,000 பேர் சிறீலங்காவில் காணாமல்போயுள்ளனர்.

உலகில் அதிகளவு மக்கள் காணாமல்போயுள்ள நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் ஒன்று. காணமல்போனவர்கள் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு அவர்களின் குடும்பத்தினர் தற்போதும் காத்திருக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு திருமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர், 2008 – 2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 2006 ஆம் ஆண்டும் ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்கா 2009 ஆம் ஆண்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சிறீலங்கா அரசு நீதியை நிலைநாட்டத் தவறியதற்கான உதாரணங்களே இவையாகும். நீதி நிலைநாட்டப்படுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானம் 30-1, சிறீலங்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம். நான்கு பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த சிறீலங்கா அரசு உடன்பட்டிருந்தது.

அனைத்துலக நிபுணர்களை உள்ளடக்கிய நீதிக்கான குழுவை அமைப்பதை நிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதையும் அவர்கள் முற்றாக நிறைவேற்றவில்லை.

காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது காணாமல் போனவர்களுக்கான பதிலை வழங்கவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும் அந்த சட்டத்தை தற்போதும் அது பயன்படுத்தி வருகின்றது. அதன் மூலம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை சிறீலங்கா அரசு அச்சுறுத்தி வருகின்றது.

பயங்கரவாதச் தடைச்சட்டத்தை பயன்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மீது அனைத்துலக சட்டவிதிகளின் அடிப்படையில் குற்றங்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் காத்திருக்கும் மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் அல்லது வரலாறு மீண்டும் திரும்பலாம்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவின் ஆணையாளர் ஆகியோர் சிறீலங்கா அரசுக்கு ஒரு காலவரையறையை நிர்ணயித்து தீர்மானங்களை நிறைவேற்ற உத்தரவுகளை வழங்கவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கின்றது.