‘மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முற்படும் ராஜபக்‌சக்கள்’  – அகிலன்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், நீதிமன்றம் என்ன சொல்லப்போகின்றது என்பதற்காகக் காத்திருக்கும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் மாவீரர் வாரத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது தீர்மானிக்கப்படப் போகின்றது. எமக்காக இறந்த உறவுகளை நாம் பகிரங்கமாக நினைவுகூரப் போகின்றோமா? அல்லது இரகசியமாக நினைவுகூரப் போகின்றோமா? இதனைத்தான் நீதிமன்றம் தீர்மானிக்கப் போகின்றது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கில் மீண்டும் பதற்றநிலை உருவாகியிருக்கின்றது. 2009 இற்குப் பின்னர் பெருமளவுக்கு இவ்வாறான நிலைதான் காணப்படுகின்றது.

இறந்த தமது உறவுகளான போராளிகளை தமிழ் மக்கள் நினைவு கூர்வதை எவ்வகையிலாவது அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அரசாங்கத்துக்கு தற்போதைய கொரோனா காலம் கைகொடுத்திருக்கின்றது. அதனைவிட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அவர்கள் கைகளில் எடுத்துள்ளார்கள்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி, நினைவேந்தல்களுக்கு நீதிமன்றத் தடை உத்தரவைப் பொலிஸார் பெறத் தொடங்கியுள்ளார்கள். மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என பல நீதிமன்றங்கள் பொலிஸாரின் மனுக்களை ஏற்று மாவீரர் தின அனுஷ்டிப்புக்கு தடை விதித்திருக்கின்றது.

சுமார் 30 வரையிலானவர்களுக்கு இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடாது எனத் தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவுகள் கையளிக்கப்பட்டுள்ளன. மேன்முறையீடு, அழைப்பாணை என அடுத்த சில தினங்களும் நீதிமன்றத் தீர்ப்புக்கள் குறித்த செய்திகள்தான் வந்துகொண்டிருக்கப் போகின்றன.

00 1 'மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முற்படும் ராஜபக்‌சக்கள்'  - அகிலன்

நினைவேந்தல் நிகழ்வுகளை எப்படியும் தடுப்பது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கும் அதேவேளையில், நினைவுகூருவதற்கான தமது உரிமையை எப்படியாவது நிலைநாட்டுவது என்பதில் தமிழ்த் தரப்பினர் உறுதியாக இருக்கின்றார்கள்.

நினைவுகூரலை அவர்கள் நிகழ்த்தப் போகின்றார்கள் என்ற தகவல் கிடைத்த நிலையில்தான் பொலிஸ் மூலமாக நீதிமன்றத் தடையைப் பெறுவதில் அரசாங்கம் அக்கறை காட்டியது. இதன் மூலம் இது சட்டத்துடன் – நீதிமன்றத்துடன் தொடர்புபட்ட ஒரு செயற்பாடாகக் காட்டிக்கொள்வது அரசின் உபாயமாக இருந்தது.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி யாராவது நினைவுகூரலை நடத்த முற்பட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண அறிவித்திருக்கின்றார்.

வடக்கு, கிழக்கில் இதற்கேற்றவாறு பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. அடுத்து வரப்போகும் தினங்கள் பதற்றம் நிறைந்ததாக இருக்கப் போகின்றது என்பதற்கான முன்னறிவித்தலாக இவை உள்ளன.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் சந்தித்த 10 தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாவீரர் தினத்தை தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார விதிமுறைகளின்படி நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றன. இதுதொடர்பில் மாவீரர் துயிலும் இல்லங்களின் பொறுப்பாளர்களுடன் பேசுவதற்கும் அந்தக் கட்சிகள் தீர்மானித்திருந்தன.

தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்த முற்பட்டால், அதனை முறியடித்து  நினைவேந்தலை முன்னெடுப்பதற்கான உபாயம்தான் இது எனச் சொல்லப்பட்டது.

இந்தக் கட்சிகளை ஒருக்கிணைக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, ஒரு படி மேலே சென்று இது தொடர்பில் தேவை ஏற்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவதற்கும் தான் தயாராக இருப்பதாககவும் கூறியிருக்கின்றார்.

அரசாங்கத்துடன் பேசுவதன் மூலமாக – தமிழர்களின் நினைவுகூரும் உரிமையை நிலைநாட்டக்கூடிய தீர்வு ஒன்றைக் கண்டுவிட முடியும் என மாவை நம்புகின்றாரா, அல்லது இந்தப் பிரச்சினை தன்னுடைய கைகளை விட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவ்வாறு சொன்னாரா என்பது தெரியவில்லை.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அவர்களும் இவ்விடயத்தில் தந்திரோபாயத்துடனேயே செயற்படுகின்றார்கள். அரசாங்கம் இதில் நேரடியாகச் சம்பந்தப்பட விரும்பவில்லை.

பொலிஸ், நீதிமன்றம் எனப் பிரச்சினையை விட்டுவிடுவதன் மூலம் இது சட்டம் ஒழுங்கு, சுகாதாரப் பிரச்சினையாகக் காட்டிக்கொள்வதுதான் அரசின் உபாயம். அதாவது, நீதிமன்றத் தீர்ப்புக்களில் தாம் சம்பந்தப்படுவதில்லை எனக் காட்டிக்கொள்வதற்கு அரசு முற்படுகின்றது. அதற்குக் காரணமும் இருக்கின்றது.

இது முதலாவது காரணம், இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையை ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையை அங்கீகரித்துள்ளது.

அதனால்தான், இது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான ஒருநிலைப்படுத்தாமல், பொலிஸ், நீதிமன்றம் என பிரச்சினையை கையளித்துள்ளது. இது நீதிமன்றத்துடன், சம்பந்தப்பட்டது என அரசாங்கம் சொல்லிக்கொள்ள முடியும் என்றாலும், அரசின் விருப்பத்துக்கு முரணாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

1 5 1 1 'மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முற்படும் ராஜபக்‌சக்கள்'  - அகிலன்

இரண்டாவது காரணம், இலங்கையில் பல ஆயிரக்கணக்கான பொது மக்களினதும், படையினரதும் மரணங்களுக்குக் காரணமாக இருந்த ஜே.வி.பி.யின் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்கள் கொழும்பிலேயே பகிரங்கமாக நினைவுகூரப்படுகின்றார்கள்.

தமிழர்களுக்கு மட்டும் நினைவுகூர்வதற்கான உரிமையை மறுப்பது அரசின் அணுகுமுறையில் உள்ள இன ரீதியான பாகுபாட்டை அம்பலப்படுத்தும். பொலிஸார் மூலம் நீதிமன்றத் தடையைப் பெறும் தந்திரோபாயத்தை அரசாங்கம் பின்பற்றுவது இதனால்தான்.

அதுசரி, எதற்காக நினைவேந்தலை மறுதலிக்க வேண்டும். அதனை விட்டுவிடலாமே என சில விமர்சகர்கள் கருத்து வெளியிடுவதையும் கேட்க முடிகின்றது. ராஜபக்‌சக்கள் அதற்கான அனுமதியை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. அதற்குக் காரணமும் இருக்கின்றது.

2009 இல் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், ஒரு தேசமாகச் சிந்திக்கும் மனோபாவம் தமிழர்களிடம் இப்போதும் இருக்கின்றது. இது தமக்கு ஆபத்தான ஒன்று என்ற கருத்து சிங்கள – பௌத்த தரப்பினரிடம் உள்ளது. அவ்வாறான மனோபாவத்தை தூண்டிவிடக் கூடியவையாக இந்த நினைவுகூரல்கள் உள்ளன என அவர்கள் கருதுகின்றார்கள்.

தமிழ் மக்களின் மனங்களிலிருந்து இந்தப் போராட்டங்கள் – மாவீரர்களின் நினைவுகளை முற்றாக அகற்றாத வரையில், அவர்கள் ஒரு கட்டத்தில் தமக்கு ஆபத்தானவர்களாக மாறுவார்கள் என்ற அச்சம் சிங்கள – பௌத்த கொள்கை வகுப்பாளர்களிடம் காணப்படுகின்றது.

தமது உரிமைகள், தாயகம் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கு இந்த நினைவுகூரல்கள் தமிழர்களைத் தூண்டும் என்பதால், இவற்றுக்கு அனுமதிக்கக்கூடாது என்பதுதான் கோட்டாபாயவை வழிநடத்தும் சிங்களக் கடும் போக்காளர்களின் சிந்தனை. ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செல்லும் இந்த அரசாங்கம் பொலிஸ், நீதிமன்றம் என்பவற்றை இதற்காகப் பயன்படுத்த முற்பட்டிருப்பதைத்தான் இந்த வாரத்தில் நாம் காணப்போகின்றோம்.