நாளை மாலை 6.05 க்கு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள் – தமிழ்க் கட்சிகள் அழைப்பு

அரசு எத்தனை தடைக் கட்டளைகளைப் பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்கமுடியாது என அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், கார்த்திகை 27ஆம் திகதி மக்கள் இல்லங்களில் மாலை 6.05 மணிக்கு நினைவுகூரலை மேற்கொள்ளுமாறு அந்தக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினரும் நேற்று மாலை ஒன்று கூடியிருந்தனர். இதன்போதே ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில்,2020ஆம் ஆண்டு மாவீரர் தினம் தொடர்பாக எட்டு கட்சிகள் சேர்ந்து கலந்துரையாடி எடுத்த முடிவுகளின் படி, மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்திகை 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளை துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் அஞ்சலித்து வந்துள்ளோம். இந்த நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு கிழக்கில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வீண்டியது எமது கடமையாகும். அதேவேளை, தென்னிலங்கையில் பாரிய அளவில் பரவியிருக்கும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் வடக்குகிழக்கு மாகாணங்களிலும் தனது தீவிரத்தை காட்ட தொடங்கியுள்ளது.

உலகளாவிய உயிர்கொல்லியாக தீவிரிடமடைந்திருக்கும் கொரோனா தொற்றைப் பொறுத்தமட்டில் எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எம் அனைவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பை உணர்ந்திருக்கின்றோம். மாவீரர் நினைவு அஞ்சலி என்பது எமது அனைவரினதும் உணர்வுகளோடு இணைந்திருக்கும் முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில். அஞ்சலி செலுத்த வேண்டிய எமது தார்மீகக் கடமையை இதனை எந்த சூழ் நிலையிலும் நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இந் நிலையில் மாவீரர் நினைவேந்தல்களை தமிழர் தாயகம் எங்கும் மக்கள் தமது இல்லங்களில் இருந்தே முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம். வழக்கம் போல மாலை 6.05 மணிக்கு தமது இல்லங்களில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு மக்களை கோருகின்றோம்” என்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சுரேஷ் பிரேமசந்திரன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஐங்கரநேசன், கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.