நினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம். 

இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும்  இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வருடா வருடம் இந்த நடைமுறை இருந்து வருகிறது. அத்துடன் நடுகல் வழிபாடும் இருந்து வருகிறது. இவை தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது.  இவை தொடர்சியாக தமிழ் மக்களால்  பின்பற்றப்பட்டு வரும் ஒரு விடயம். இந்தக் கலாசார உரிமையை மறுப்பது என்பது இன அழிப்புக்குச் சமனானது.

ஒரு இனத்தின் இருப்புக்கு நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் இந்த நான்கும் முக்கியமானது. இதில் ஒரு விடயம் அழிக்கப்பட்டாலும் அது ஒரு வகையான இன அழிப்புத்தான்.

நினைவுகூருவது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயம். அது மறுக்கப்படுவது அடிப்படை உரிமை மீறும் செயல் ஆகும். மேலும் ஆற்றுப்படுத்தல் உரிமை மறுக்கப்படுகிறது. அதாவது  உள ரீதியாக ஆற்றுப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறப்படுகிறது. அரசு நல்லிணக்கத்தைக் காட்டுவதென்றால், பொதுப்பிரச்சனைகளை தீர்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அரசு நல்லிணக்கத்துக்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.

நினைவேந்தல் தடை  விவகாரம் சட்டப் பிரச்சனை இல்லை. இதை அரசியல் செயற்பாடுகள் ஊடாகத்தான் தீர்க்க முடியும்.  சட்ட அணுகுமுறை தீர்வைத் தரப்போவதில்லை.

அத்துடன் இதை நாம் தனியாக அணுக முடியாது. குறிப்பாக உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள், உலகத் தமிழர்களை இணைத்துத் தான் அணுக வேண்டும். அதற்கு முதற்கட்டமாக தாயகத்தில் உள்ள தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் கட்சிகள் தனித்தனியாக கையாள நினைத்தது துரதிஸ்டவசமானது.

ஒருங்கிணைந்த அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை வெற்றிகொள்ள முடியும். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் கட்சிகள் ஒன்றிணைந்தமை வலுவான செய்தியை உலகுக்குக் கொடுத்தது.

அரசு சட்ட செயற்பாடுகளுக்கு பயப்படாது,  அரசியல் செயற்பாடுகளுக்கே பயந்துள்ளார்கள். எனவே  உலகளாவிய அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். எனவே தமிழ்  மக்களின் பொது விவகாரங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த விடயங்களில் முன்னேற்றம் காண முடியும்” என்றார்.