தமிழக மீனவர் படகுகளை இலங்கை அரசாங்கம் அழிப்பது தொடர்பாக இந்தியப் பிரபலங்கள் கண்டனம்

தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கைக் கடற்படை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்த 121 படகுகளை உடைத்து நொறுக்குவதற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தொடர்பாக இந்தியப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலர் கண்டனங்கள் தெரிவித்திருக்கின்றனர்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று(09) வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கைக் கடற்படை சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்த 121 படகுகளை உடைத்து நொறுக்குவதற்கு இலங்கையில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். அவர்களின் இந்த செயலானது கண்டனத்திற்குரியதாகும்.

இவ்வாறு நீதிமன்றங்கள் மூலம் ஆணை பெற்று படகுகளை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? இப்படியொரு அக்கிரமத்தை – அநியாயத்தை மத்திய பாஜக அரசும் – மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் வேடிக்கை பார்ப்பது தகுமா?

ஆனால், இந்தியப் பிரதமரோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரோ இதுபற்றித் தட்டிக் கேட்டு – தமிழக மீனவர்களுக்கு நீதி கிடைக்க முயற்சியும் எடுக்கவில்லை – மீன்பிடி உரிமையையும் நிலைநாட்டித் தரவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மீனவர்களின் உயிர் போன்ற படகுகளை அழிக்கும்போதும் மயான அமைதி காக்காமல் – முதல்வர் பழனிசாமி பிரதமரை உடனே தொடர்புகொண்டு – தமிழக மீனவர்கள் நலன் காக்கும் முயற்சிகளில் அவசரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”. என்று கேட்டுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று(09) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்திட்ட வாக்குறுதிகள் பலவும் தொடர்ந்து நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உடமைகளுக்கும், உயிர்க்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது மிகுந்த கவலைக்குரியதாகும்.

இந்திய அரசு இலங்கையுடன் உள்ள நல்லுறவை பயன்படுத்தி தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு மீனவர்களிடம் வழங்கிட உரிய நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக மீனவர்களின் உடமைகளை காக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (09), பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்தக் கடிதத்தில்,

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600இற்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றனர். நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்துக்கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 இலட்சம் பெறுமதியானவை. அவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டி வருகின்றார்கள். அந்தப் படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம்.

இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்குமாறு கோரி, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் நான் தொடர்ச்சியாகத் தங்களிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்துள்ளேன். ஆனால், பயன் எதுவும் இல்லை.

எனவே, இந்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும். அல்லது, அதற்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும். தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”. என்று எழுதியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் இன்று (09) வெளியிட்ட அறிக்கையில்,

மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசோடு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி நம்முடைய மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நமது மீனவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தையும் அதனால் வாழ்வாதாரத்தையும் இழப்பார்கள். இந்த சோதனையான நேரத்தில் அவர்களோடு மத்திய, மாநில அரசுகள் துணைநின்று காப்பாற்ற வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி ஜேசுராஜா கூறியதாவது: இலங்கை நீதிமன்றங்கள் அப்படகுகளை அழிக்க உத்தரவிட்டிருப்பது வேதனையாக உள்ளது. ஒவ்வொரு படகும் ரூ.15 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் மதிப்பிலானவை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழக விசைப்படகுகளை அழிக்காமல் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.