உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை.

விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமானதே. இன்னொரு வகையில் நோக்கின் முள்ளிவாய்க்காலின் பின்னர் இதுவரை அந்த நம்பிக்கையை யாரும் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தமான உண்மை. தலைமைத்துவ ஏற்பு என்பது திணிப்புக்குரியது அல்ல. அல்லது பேச்சின் பால் ஏற்படுவதும் அல்ல. அது தீர்க்கமான தொடர் செயற்பாடுகளால் ஏற்படுத்தப்படுவது. அந்தச் செயற்பாடுகளால் மனங்கள் வெல்லப்படுவது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனவழிப்பை மேற்கொண்டவர்கள் தங்களுக்குள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து எங்கள் விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடுகளுடனேயே உள்ளார்கள். ஆனால் அந்தக் கொடிய இனவழிப்புக்கு உள்ளானவர்கள், எங்களுக்குள் கலந்து பேசி இனத்திற்காக ஒருமித்த நிலைப்பாடுகளுடன் நிற்க வேண்டியவர்கள், ஆயிரம் காரணங்களோடு கூறுபட்டுக் கிடக்கின்றோம். தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களெங்கும் இதே நிலமைகளே தொடர்கின்றன. எமது மக்களின் உரிமைகள் வெல்லப்பட வேண்டுமென்பது மட்டுமே எங்களது இலக்காக இருக்க வேண்டும். இந்த ஒற்றைக் காரணத்துக்காகவே ஆயிரமாயிரம் மாவீரர்களும் பல்லாயிரக்கணக்கான எங்களது அன்பு மக்களும் உயிரீந்து போனார்கள்.

எங்களோடு நெஞ்சு நிமிர்த்திப் போராடிய தோழர்களதும் தோழிகளதும் குடும்பங்கள் நிர்க்கதியாய் தூக்கி நிமிர்த்த உரிய ஆதரவின்றி துவண்டு கிடக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் வரை மரியாதையோடும் அக்கறையோடும் கவனிக்கப்பட்டு வந்த முள்ளந்தண்டுக்கு கீழ் இயங்க முடியாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் மனமுடைந்து கிடக்கின்றார்கள். எமது விடுதலை அமைப்பால் கவனிக்கப்பட்டு வந்த அனைத்துத் தேவைக்குரியவர்களும் இன்று உரிய கவனிப்பற்று இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்துக்கு பின்னான தனது பணியென்பது இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது தான் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூறியிருந்தார். மூச்சுக்கு முந்நூறு முறை அவரது பெயரை உச்சரிக்கும் நாம் இதனை எந்தளவுக்கு நெஞ்சிலேற்றிச் செயலாற்றி இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சமாதானம் என்று சொல்லப்பட்ட காலப்பகுதியில் நான் வன்னி சென்ற போது, எமது விடுதலை அமைப்பின் பணியகம் ஒன்றில், எமது மக்களின் நாளாந்த தேவைகளைக் கண்டறிந்து அதனை திட்டமிட்டு உரிய முறையில் தீர்த்து வைப்பதே அரசியலென்ற கருத்துப்பட தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்றொன்று என் சிந்தையை நிறைத்தது. அப்போது தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏன் அரசியல் பிரிவின் கீழ் செயற்படுகின்றதென்ற தெளிவையும் நான் பெற்றுக் கொண்டேன். இந்த நோக்கிலிருந்து அண்மையில் வெளிப்பட்ட தாயக தேர்தல் முடிவுகளையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களது மக்களை திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் தூக்கி நிறுத்த ஒட்டுமொத்தப் பார்வையில் நாம் தவறி விட்டோம். எப்போதுமே பரந்துபட்ட மக்களின் ஆதரவும் பங்கெடுப்புமின்றி போராட்டங்கள் வெற்றி பெறுவதில்லை.

புலனாய்வாளர்களின் கழுகுப் பார்வைக்குள் எமது தாயக தேசம் சிக்குண்டு சுயமாகவும் சுதந்திரமாகவும் எதனையுமே செய்ய முடியாத இந்தக் காலகட்டத்தில், சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்கக் கூடிய தளமாக புலம்பெயர் நிலங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இந்தப் புலம்பெயர் நிலங்களில் எங்கள் தாயகமும் தாயகத்து மாந்தர்களும் தந்த வாழ்க்கையையே பெரும்பாலான நாம் வாழ்ந்து வருகின்றோம். இப்போதிருக்கின்ற சூழமைவில் புலம்பெயர் நிலங்களில் வாழ்கின்ற நாங்கள் தான் இலக்கு நோக்கிய எங்களது இலட்சியப் பயணத்தை காத்திரமாக முன்னகர்த்த முடியும். அதற்கு புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை, கலந்தாய்வு, கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயற்பாடு, எங்களைப் பின்வைத்து இலக்கை முன்வைக்கின்ற மனப்பான்மை மிகவும் இன்றியமையாதது.

இதற்கெல்லாம் அடிப்படையாக மாறிமாறிச் சேறடிக்கும் அணுகுமுறையை நாம் அடியோடு களைதல் வேண்டும். “நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்” என்ற தமிழீழத் தேசியத் தலைவரது சிந்தனையை உச்சரிப்பதோடு மட்டும் நின்று விடாது, அதனை உளமார ஏற்று செயலாற்ற வேண்டும்.

களத்தில் நின்று களப்பணியாற்றியவர்களுக்கும் புலம்பெயர் தேசங்களில் தாயகப்பணி ஆற்றியவர்களுக்கும் வெவ்வேறான ஆற்றல்களும், ஆழுமைகளும், அனுபவங்களும் உண்டு. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கவனங்களோடு நாம் அனைவரும், தங்களது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களையும், உயிரீந்த மக்களையும் நெஞ்சிருத்தி எமக்கிடையில் இருக்கின்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்து இலக்கிற்கான பயணத்தில் நாம் ஓன்றிணைய வேண்டும்.

எதிரி வேகமாகவும், விவேகமாகவும் எமது தாய்நிலத்தை அபகரித்து எமது பண்பாடுகளை, தொல்லியல் சின்னங்களை அழித்து எமது கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் அனைத்தையும் நிர்மூலமாக்கி வருகிறான். இதனை முடிந்தவரை தடுத்து நிறுத்தி இலக்கு நோக்கிய எங்கள் பயணத்தை வேகப்படுத்த வேண்டுமாயின் நாம் செயற்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்.

நாம் ஒரு தொன்மையான தனித்த தேசிய இனமென்பதையும், எமக்கான தேசம் உண்டு என்பதையும் நாம் உளமார நம்ப வேண்டும். அப்போது தான் தன்னாட்சிக்கான எங்களது பயணத்தை நாம் நம்பிக்கையோடு தொடர முடியும். மக்களுக்கான உண்மை அரசியலை தங்களது சுயநலன்களைக் கடந்து எங்களது அரசியல் செய்வோர் முன்னெடுக்க வேண்டும். ஈழத் தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க உலகத் தமிழர்களின் பேராதரவை நாம் பெற்றாக வேண்டும்.

புலம்பெயர் நிலங்களிலுள்ள மிகப்பலம் பொருந்திய எங்களது இளையவர்களை அவர்களுக்குரிய வகையில் நாம் உள்வாங்கி, இலக்கை நோக்கிய இலட்சியப் பயணத்தில் அவர்களையும் பங்குபெறச் செய்ய வேண்டும். இவற்றை எல்லாம் காலந்தாழ்த்தாது நாம் முன்னெடுக்க வேண்டுமானால், எங்களுக்கிடையிலான பிணக்குகளில் கிடைத்தற்கரிய நேரங்களை செலவிடுவதை விடுத்து பயனுள்ள வகையில் தேசப்பணியாற்ற முன் வருவோம். எமக்கான பலங்களை நாம் இனங்கண்டு ஒன்றிணைத்து அறிவை ஆயுதமாகக் கொண்டு எமது இலட்சியப் பயணத்தை உறுதியோடு நாம் தொடர வேண்டும்.