முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 3

133
235 Views

இந்த இடத்தினை வைத்து பலர் பணம் சம்பாதிக்க முயல்வர். உண்மையற்ற பல கதைகள் கூறி ஏமாற்றுவார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேணும்.

இந்த இடத்துக்கு 10 பேர் செல்லணும் என்றால் ஒருவரிடம் 1500 ரூபாய் கொட்டியாகலையில் இருந்து போக்குவரத்துக்கும், 500 ரூபாய் சாப்பாட்டுக்கும் இருந்தால் போதுமாக இருக்கும்.

இந்த புளியமரம் அமைதியாக மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது என்பதை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும். அனைத்தையும் இங்கு சொல்லிவிட்டால் அங்கே சென்று மெய்சிலிர்த்து பார்க்க உங்களுக்கு ஒன்றுமிருக்காது.

இந்த மரத்தின் பழமையான சிலையின் கீழே ஓர் பீடக்கல் போன்ற அமைப்பு உள்ளது. இதற்கு பெயர் சத்தியக்கல். என்ன சத்தியக்கல்லா? என நீங்கள் கேட்கலாம்.

அனைத்துமே அங்கு புகைப்படம் எடுத்துகொண்டு இருக்கும் போது “தம்பி அந்த கல்லை மிகஅருகில் Zoom பண்ணி போட்டோ எடுங்க” என்று கூறிய பின் திருச்செல்வம் ஐயா சொன்னவை தான் இவையெல்லாம்.

ஆதி காலத்தில் இங்கு வாழ்ந்த வேடுவ மக்களது பிரச்சினைகளுக்கு நீதிமன்றமாக இருந்தது இந்த மரத்தடி தான். பிரச்சினைகள் ஏற்படும் போது பிரச்சினைக்குரிய இரு தரப்பினரையும் கூட்டிக் கொண்டு வந்து இந்த சத்தியக்கல்லின் மீது கையை வைத்து அவரவர் தரப்பு நியாயங்களை முருகன் முன்நிலையில் ஒப்புவிப்பர்களாம்.

குற்றம் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்த தரப்பினருக்கு அன்று இரவு கடவுளால் தண்டனை வழங்கப்படுமாம். இதனால் அந்த வேடுவக் குடியிருப்பில் குற்றச்செயல்கள் செய்ய அனைவரும் அஞ்சுவார்களாம்.  அப்படிப்பட்ட பின்னணி கதைகளுடன் தொடர்புபட்டது தான் இந்த சத்தியக்கல்.

ஆனால் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த சத்தியக்கல் இன்னும் அங்கு போற்றுதலுக்குரிய ஒரு விடயமாக இருக்கிறது என்பதை இதன் மூலமாக வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.

நல்லா இருட்டி விட்டது என்றாலும் அன்று பௌர்ணமி தினம் என்பதால் நிலா வெளிச்சம் எமக்கு துணையாக இருந்தது. நாங்கள் புளியமரத்தினை சுற்றி கும்பிட்டு விட்டு வரும்போது தான் எங்களோடு வந்த சிலர் ஓட்டமும் நடையுமாக புளியமரம் இருந்த பக்கம் வந்தர்கள். ஏன் தாமதம் என நாம் வினவ..

யானை எங்களை எல்லாம் தடுத்து வைத்து விட்டது ஐயா..! இப்ப தான் விடுவித்தது என்று கூறிக்கொண்டே நடந்தார்கள்..

யாரை விடணும், யாரை விடக்கூடாது என காவலருக்கும் தெரிந்திருக்கும் போல.. எங்கள் கூட்டத்தில் என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் பக்தர்கள், என்னை எப்படி காவலர் முதல் தடவையிலேயே உள்ளே செல்ல அனுமதி தந்தார் என இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது..

மீண்டும் ஒரு மாதிரியாக ஏற்கனவே பிரசாதம் வைத்து கும்பிட்ட இடத்துக்கு வந்து பார்க்கிறோம் சட்டி நிறைய வைத்திருந்த அவலை காணவில்லை. சட்டியும் ஒரு பக்கம் விழுந்து கிடந்தது. நடந்ததை புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுக்கவில்லை. காவலுக்கு நின்ற யானை தான் அதனை சாப்பிட்டு விட்டது.

கடவுளுக்கு பிரசாதம் எனும் பெயரில் எமக்கு விரும்பியதை படைத்து விட்டு நாமே அதை எடுத்து மீண்டும் சாப்பிட்டு விடுவோம். அதே நிலமை தான் இங்கும் இருக்கும் என எதிர்பார்த்தேன்.. பிறகென்ன பிள்ளையார் யானை உருவத்தில் வந்து பிரசாதத்தினை ஏற்றுக்கொண்டார் என சொல்லிக்கொண்டே பாதுகாப்பாக எம்மை கூடிக்கொண்டு சென்று திரும்ப கொண்டுவந்து விட்ட அதிகாரிக்கு நன்றி கூறிவிட்டு குமுக்கன் ஆற்றை கடக்க தயாரானோம்.

எப்படியோ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் உதவியால் உள்ளே சென்று பார்த்து விட்டு திரும்பி விட்டோம். ஆற்றை கடந்து வந்த களைப்பு நீங்க எங்கேயாவது உறங்குவோம் என கொண்டு வந்த படங்கு ஒன்றை விரிக்கும் போது ஒரு சத்தம் கேட்கிறது. இரவு சாப்பாட்டுக்கு பாண், வாழைப்பழம், சீனிச்சம்பல் மற்றும் ஜாம் என்பன இருக்கிறது. அனைவரும் சாப்பிட தயாராகினர்.

ஏற்கனவே சோறு சமைத்துச் சாப்பிடுவது தான் திட்டம். பிறகு இந்த இருட்டுக்குள் எங்கு சென்று விறகு தேடுவது.. அத்தோடு சமைத்து முடியவும் நேரம் எடுக்கும். அனைவருக்கும் களைப்பும் பசியுமாக இருக்குது. பாணையே சாப்பிடுவோம் என முடிவெடுக்கப்பட்டது.

கொண்டு வந்த 12 இறாத்தல் பாணையும் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு காலை 4 மணிக்குள் எழும்பி பொங்கல் வைக்க தயாராக வேண்டும் என கூறியபடியே சாப்பிட விரித்த படங்கை சற்று விரித்து போட்டோம்.

19 பேரும் நித்திரை கொள்ள கொண்டு வந்த படங்கு போதவில்லை அதனால் சிலர் உளவு இயந்திர பெட்டியினுள்ளும் சிலர் விரித்த படங்கிலும் படுத்துக் கொண்டோம்.

அருகில் கபிலத்தை காவல் தெய்வமான வீரபாகு தேவருக்கு பூசை ஆரம்பிக்கின்றது. நேரம் இரவு 9.30 மணியை கடந்திருக்கும். எம்மைப் போல பக்தர்கள் பலர் கூடாரம் அடித்து எமக்கு அருகில் தங்கியிருந்தனர்.

உளவு இயந்திர பெட்டியில் நாளை அபிஷேகத்திற்காக நாம் கொண்டு வந்த பழங்களின் வாசனை எமக்கு மூக்கை துளைத்தது. காட்டு மிருகங்களின் நுகர்வு திறன் மனிதரை விட பல மடங்கு மேலானது. அதிலும் யானையின் மோப்ப சக்தி பற்றி நான் சொல்லத் தேவையில்லை. நடப்பது நடக்கட்டும். நான் படுக்கிறேன் என சொல்லிக்கொண்டு முகத்தினை வேட்டியால் மூடிக்கொண்டு படுக்கிறேன். அருகில் குகன் டாக்டர் கந்த சஷ்டி கவசம் படித்துக் கொண்டிருக்கிறார், மற்றப்பக்கம் காரைதீவு கோகுலரஞ்சன் அண்ணா அரைகுறை நித்திரையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

ஏதும் நடந்தால் இவர்கள் நம்மை எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையோடு நானும் கண்ணை மூடி தூங்கினேன். கண்ணை மூடியதும் கந்த சஷ்டி கவசமும் மற்றப் பக்கம் வீரவாகு தேவருக்கு நடக்கும் பூஜையின் சத்தமும் தான் கேட்டுக்கொண்டிருந்தது.

வீரவாகு தேவருக்கு சிங்களத்திலேயே பூஜைகள் நடைபெறும். இதற்காக பூசாரிகள் அருகில் இருக்கும் ஊரான கொட்டியாகலையிலிருந்தே வருவிக்கப்படுகிறார்கள்.

காவியம் போன்ற ஒன்றை அண்ணளவாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூசாரி சிங்களத்தில் பாடிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவருக்கு உருவேறுகிறது. அவர் நன்றாக தலைமுடி வளர்த்திருந்தார். தற்போது உருவேறியதும். தலையை சுழற்றிக் கொண்டே சிங்கள காவியத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்..

அரண்ட நித்திரையில் நடப்பதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த நேரம் ஆற்றங்கரையை நோக்கி சிலர் டோர்ச் வெளிச்சத்தை அடிப்பதை காணக்கூடியதாக இருந்தது. இந்த நேரத்தில் யாருடா வெளிச்சம் அடிச்சு விளையாடுகிறது. யானை வருகிறதோ என நக்கலாக கதைத்துக் கொண்டே தலைமாட்டில் இருந்த டோர்ச் லைட்டை எடுத்து நாமும் அடித்து பார்க்கும் போதுதான் தெரிந்தது; உண்மையிலேயே யானை ஒன்று குமுக்கன் கரையில் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது.

அதனை டோர்ச் அடித்து தொல்லை பண்ண வேண்டாம் என அனைவருக்கும் எச்சரிக்கப்பட்டது. அத்துடன் நாமும் டோர்ச் அடிப்பதை நிறுத்திவிட்டு, நிலவொளியில் தெரியும் அசைவை மட்டும் மறு கரையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தோம்.

அனைவரது கவனமும் ஆற்றில் நிற்கும் யானையை நோக்கியபடியே இருந்தது. இங்கே இந்தச் சம்பவம் நடக்கும்போது இதற்கு சமாந்தரமான நேரத்தில் பத்தினி அம்மன் கோவில் அருகே உள்ள வழியால் வந்த பெரிய காட்டுப் பன்றி ஒன்று எமக்கு பின்னால் சத்தமின்றி வந்து நின்றது. உழவு இயந்திர சாரதிகளும் பக்தர்கள் சிலருமாக இணைந்து பன்றியை வேறு திசைக்கு விரட்டி விட்டனர். எனினும் வேறு ஏதும் மிருகங்களின் தொல்லை ஏற்படலாம் என்பதால் வந்திருந்த சாரதிகள் அனைவரும் இணைந்து இரவு தூங்காமல் காவலுக்கு இருந்தனர்.

தொடரும்…………

– மட்டுநகர் திவா-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here