விடுதலைப்புலி உறுப்பினரின் உறவினராலேயே பிரச்சனை -சிறிசேன குற்றச்சாட்டு

இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதே பிரச்சினைகள் எழுந்தமைக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனது ஆட்சிக்காலத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பபெறுகின்றன என சிறீலங்காவின் மனித உரிமை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவைக்கு அறிவித்தது.  படையினரும் பொலிஸாரும் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை ஆணைக்குழு முறைப்பாடுசெய்தது.

பொலிஸ் நிலையங்களில் துன்புறுத்தல்கள் இடம் பெறுகின்றன என சிறீலங்காவின் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்தது. இது குறித்த விசாரணைகளை பூர்த்தி செய்யும் முன்னரே மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து ஜெனீவாவிற்கு தெரிவித்திருந்தது.

சிறீலங்காவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழு செய்த  முறைப்பாடுகள் காரணமாக சிறீலங்கா இராணுவத்தினரும் பொலிஸாரும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைவதற்கான வாய்ப்புகளை இழந்தனர்.

இதன் காரணமாக நான் ஆணைக்குழுவின் தலைவரை அழைத்து என்ன செய்கின்றீர்கள் என கேட்டேன், உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் உயர் பதவியில் அமர்த்தப்பட்டமை பின்னரே எனக்கு தெரியவந்தது அவரே சிறீலங்காவிற்கு எதிராக அறிக்கைகளை ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளார்.”  என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.