சிறீலங்காவில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

மினுவாங்கொட கொத்தணி கொரோனா பரவல் காரணமாக சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சிறீலங்காவில் கொரோனா தொற்றாளர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் மினுவாங்கொட கொத்தணியில் 194 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறீலங்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக அதிகிரித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணி குறித்த விபரங்கள் வெளியானவுடன் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் உட்பட் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் மேலும் 11 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 328 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் ஆயிரத்து 697 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருப்பதாவது,

பொது விடுதிகளில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணி புரிந்து வருபவர்கள் இதுகுறித்து பணிபுரியும் தமது நிறுவனத்திடம் அறிவிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்றெனத் தெரிவித்த இராணுவத் தளபதி இதுவியத்தில் தொடர்புடைய அனைவரும் இவ் அறிவித்தலை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.