சர்ச்சைக்குள் ரிஷாட் சகோதரர் விடுதலை; 2 உயர் சி.ஐ.டி.யினருக்கு சட்டமா அதிபர் அழைப்பு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, இலங்கையில் இடம் பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில், கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீன், திடீரென விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவருக்கு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா அழைப்பு விடுத்துள்ளார்.

சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர், சி.ஐ.டி.யின் பிரதம விசாரணை அதிகாரி ஆகியோருக்கே சட்டமா இன்று திங்கட்கிழமை, ரியாஜ் பதியூதீனை விடுதலை செய்தமைக்கான அனைத்து ஆவணங்களுடனும் வருமாறு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன், உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், புத்தளத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி, அவர் திடீரென விடுதலை செய்யப்பட்டமை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அவருக் குத்தொடர்பு இல்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தே அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.