கொரோனா நோயாளர்களை தேடும் இராணுவம்?

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடுகின்றோம் என்று கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் நேற்று தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று வரை 5 ஆயிரத்து 357 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் எனவும் அவர் கூறினார். கொரோனாத் தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் தம்மிடம் உள்ளன எனவும்இ அதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 1000 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் அதேவேளையில், 3000 வரையிலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 119 பேர் தலைமறைவாகியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.