பாதுகாப்புச் சபையின் கூட்டத்துக்கு மைத்திரி என்னை அழைப்பதில்லை; ஆணைக்குழு முன் ரணில் சாட்சியம்

2018 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தன்னை அழைக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில், உண்மையைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முதல் தடவையாக சாட்சியமளிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு, 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், தன்னால் நூல் ஒன்றைக்கூட எழுத முடியும் என்று ரணில் தெரிவித்தார்.

மேலும், 52 நாள் அரசின் ஆட்சிக்காலத்தில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம், அவருக்கு பாதுகாப்புச் சபைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதா? எனத் தான் வினவியதாகவும், அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் ரணில் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று முற்பகல் 10.00 மணியளவில் சாட்சியமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். இருப்பினும், இடையில் முன்னாள் பிரதமருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சாட்சியமளிப்பு பிற்போடப்பட்டதுடன் இதுதொடரபில், ஆராய்ந்த ஆணைக்குழுவினர் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு அறிவித்தனர்.