மாவையின் ராஜினாமா கடிதத்தை துரை மறைத்து வைத்தாரா? அம்பலமாக்கும் குலநாயகம்

“தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தான் பதவி விலகுவதாக எழுதிய கடிதத்தைத் தங்களிடம் தந்தபோது, அதனை மத்திய செயற்குழுவில் அல்லது அரசியல் குழுவில் சமர்ப்பிக்காது மறைத்து வைத்திருந்தீர்கள். ஓராண்டுக்குப் பின்னரே சேனாதிராசா கூறி மற்றவர்களுக்குத் தெரியவந்தது” என தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கி.துரைரட்ணசிங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

பொதுத் தேர்தலையடுத்து தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தில் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த துரைராஜசிங்கம் இராஜினாமாச் செய்யும்நிலைமை ஏற்பட்டது. அதையயாட்டி அவர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு “தனிப்பட்டதும் பகிரங்கப்படுத்தக் கூடாததும்” என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால், ஊடகங்களில் அது பகிரங்கமாகியது.

அந்தக் கடிதத்தில் ஒரு வசனம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கடிதத்தின், இரண்டாம் பந்தியில், “2017 மட்டில் சேவியர் குலநாயகம் தனக்குத் தேசியப் பட்டியல் நியமனம் கோரினார். எனக்குக் கடிதம் எழுதினார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைச் சுட்டிக் காட்டி இப்போது துரைராஜசிங்கத்துக்கு 22.09.2020 திகதியிட்டு குலநாயகம் ஒரு பதில் கடிதம் வரைந்திருக்கின்றார். தாம் அப்படித் தேசியப் பட்டியல் நியமனம் கோரி ஒரு கடிதத்தை துரைராஜசிங்கத் துக்கு எழுதவேயில்லை என்று தொடங்கி, அப்படிக் கடிதம் எழுதியிருந்தால் அதைக்காட்டுங்கள் என்று கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் சவால் விட்டிருக்கின்றார்.

அந்தக் கடிதத்தில் இடையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை மாவை சேனாதிராசா இராஜினாமாச் செய்தபோது, அந்தக் கடிதத்தைப் பகிரங்கப்படுத்தாமல், கட்சிக்குச் சமர்ப்பிக்காமல் ஒளித்து வைத்து, கட்சித் தலைமைப் பதவி மாவை சேனாதிராசாவிடமிருந்து நழுவிப் போகாமல் உறுதிப்படுத்திப் பார்த்துக் கொண்டவர் துரைராஜசிங்கம் என்பதும் குலநாயகத்தின் பதில் கடிதம் மூலம் அம்பலமாகியிருக்கின்றது.

அக்கடிதத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு;

“இதேநேரம் 1989 இல் தேசியப்பட்டியல் நியமனத்துக்காக அடாவடித்தனம் செய்தவர்களும், 1994இல் தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் வெற்றி பெற்றவரின் ஆசனத்தைக் கோரி சன்னதமாடியவர்களும் இருக்கின்றார்கள். இவை தங்களுக்குத் தெரியாது இருக்கலாம்.

ஆனால் மேற்படி அனுபவங்களைக் கண்டவன் யான். எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் பதவி பெற அவாப்பட்டவனுமில்லை, அதற்காகக் சன்னதம் ஆடி அடாவடித்தனம் செய்தவனுமில்லை. ஆனாலும் நியாயத்தின்படியும் தார்மீக அடிப்படையிலும் தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட வேண்டிய முறையைச் சொல்லி வந்தேனே தவிர, வாகனங்களில் ஆள்களைக் கூட்டிக்கொண்டு திருகோணமலைக்கும் மாவிட்டபுரத்திற்கும் காவடி எடுத்தவனுமல்ல.

பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களோ அல்லது நானோ தேசியப் பட்டியல் நியமனம் பெற்று விடக் கூடாது என்பதில் சம்பந்தன், சேனாதிராசா மற்றும் நீங்கள் மிகக் கவனமாக இருந்து வந்தீர்கள். உண்மைகளை மறைத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடாது. அடாவடிகளின் அடாவடித்தனங்களாலும், பதவி மோகம் கொண்டவர்களாலும், சுயநலவாதிகளாலும், நயவஞ்சகர்களாலும் நெருடப்பட்டு இன்று எமது கட்சி பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

எமது முன்னைய தலைவர்கள் போன்று தியாக வாழ்வும், அர்ப்பணிப்பும், சேவை உள்ளமும் கொண்டவர்களாக இன்று எம்மில் யாருளர்?”