இந்தியாவிடம் 7,500 கோடி கடன் கோரியுள்ள இலங்கை

அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இலங்கை இந்தியாவிடம் மேலும் 7,500 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது.

கொரோனா பாதிப்பால் சுற்றுலா வருவாய் குறைந்ததையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் இலங்கையின் கடன் தகுதியைக் குறைத்துள்ளது.

இதேவேளை இலங்கையின் மூலதன சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவால் கப்ரால் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்திய றிசேவ் வங்கியிடம் ஜுலை மாதம் அந்நியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இதற்கமைவாக 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டொலர்களை இந்திய றிசேவ் வங்கி வழங்கியுள்ளது. தற்போது மேலும் 7,500 கோடி ரூபாய் மதிப்பிற்குரிய டொலர்களை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்.

எதிர்வரும் 2022 நவம்பர் மாதத்திற்குள் இந்திய றிசேவ் வங்கியிடம் பெற்ற டொல்கள் மதிப்பிலான தற்போதைய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் இலங்கை அரசு திரும்ப வழங்கிவிடும் என்று கூறினார்.