திலீபன் நினைவுகள்-‘இந்தியாவின் உண்மை முகம் வெளிப்பட்ட நாள்’

உண்ணா நோன்பின் ஒன்பதாம் நாளில் திலீபன் நினைவுகள் அவர் தோழன் ராஜனின் மனப்பதிவுகளில் இருந்து…

இன்று ஒன்பதாம் நாள், திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய தூதுவருக்கு கிடைத்த சந்தர்ப்பம். அவரின் அணுகுமுறை பிடிவாத குணம். ஆணவ இயல்புகளால் அமைதியாக வாழ வேண்டிய இனம் இன்றுவரை அமைதி இழந்து வாழ்கிறது. பாதிக்கப்பட்ட இனத்தின் பக்கம் சார்ந்து முடிவு எடுக்க வேண்டிய ஐந்து அதிகாரிகள் எங்கள் பக்கம் தலைவருடன் சேர்த்து ஐந்து பேர் பேசினார்கள். ஆனால் தூதுவர் டிக்சிற் எழுத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று தருவதற்கு தயாராக இருக்கவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் பெரும் போராட்டங்களை நடாத்தினார்கள். மன்னாரில் பிற்காலத்தில் மாணவர் அமைப்பிற்கு பொறுப்பாவிருந்த மரிசால் அப்பாவின் தமையனார் அமைதிப்படையால் மறியல் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒன்பதாம் நாள் இந்திய தூதுவர் டிக்சிற் அவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அப்பாவி பொது மகன் கொலையுடன் முடிந்தது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.

இன்றைய ஒன்பதாம் நாளில் எமது நண்பர்களுடன் வேறுபாடு காட்டாது தீலிபன் பழகியதும் அந்த நண்பர்களான மதி, ரமேஷ், செல்வம், விக்கினா( வேறொரு தாக்குதலில் வீரமரணம்) முரளி ஆகியோரின் நினைவுகளுடன் ரெலி இயக்க ஜெகனுடன் நட்பு கொண்டு எம்முடன் இணைக்க மேற்கொண்ட முயற்சிகளையும் அதன் பின் நடந்த சம்பவங்களையும் நினைத்து பார்க்கிறேன்.

அன்றைய காலகட்டத்தில் 40ற்கும் மேற்பட்ட இயக்கங்கள். எங்களுடன் இருந்தவர்கள் ரெலி இயக்கம்  எமது அமைப்புடன் இணைந்து செயற்பட உடன் பட்டிருந்ததால் ரெலி இயக்கத்திற்கும் எங்களிற்கும் ஒரு புரிந்துணர்வு இருந்தது. இதனை விட திலீபனும் ரெலி இயக்கத் தலைவர் ஜெகனும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் கூடிய பலமாக இருந்தது.

அன்றைய காலத்தில் பொலிஸ் நிலையங்கள் இருந்தன. பொலிஸார் ஜீப் வண்டிகளில் ரோந்து செல்வார்கள். இவர்களின் கண்களில் மண் தூவிவிட்டு தான் எங்கள் கிராமங்களின் குச்சு ஒழுங்கைகளிற்குள் விடுதலைப் போராட்டம் வளர்க்கப்பட்டது.

இந்த வேளையில் யாழ் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி ஒன்றை கோட்டை முனியப்பர் கோவில் வளைவில் லொறியால் அடித்து பிரட்டி ஒரு இயந்திர துப்பாக்கியை ஜெகனும் தோழர்களும் எடுத்து விட்டார்கள். தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது. அடுத்த நாள் பேப்பரில் தலைப்பு செய்தியாக இருந்தது.

எங்கள் நண்பர்கள் வீரர்களாக உலா வந்தார்கள். எடுக்கப்பட்ட துப்பாக்கிக்கு குண்டுகள் இல்லை மகசீன் இல்லை. ஜெகன் உட்பட ஒருவருக்கும் துப்பாக்கியை இயக்கவும் தெரியாது. அன்று மாலை நண்பன் முரளி துப்பாக்கியை சாக்கால் சுற்றி என்னிடம் காட்டினான். நான் தொட்டுப் பார்க்க நினைத்த துப்பாக்கி எங்கள் ஊர் நண்பர்கள் கையில் அதுவும் எதிரியுடன் இரத்தம் சிந்தாது துப்பாக்கியும் எடுத்தது, மிக்க மகிழ்ச்சியில் எல்லோரும் இருந்தோம். முரளி என்னிடம் எங்கு ஒளித்து வைக்கிறது என்று கேட்டான். இறுதியில் பனையோலையால் அடைக்கப்பட்ட வேலிதான் தஞ்சம் தந்தது.

எங்களுடன் இருந்த நண்பர்களும் ஜெகன் தலைமையில் லொறியால் அடித்து பொலிஸ் ஜீப்பில் இருந்து துப்பாக்கி எடுத்து விட்டார்கள். நாங்களும் ஏதாவது செய்து துப்பாக்கி எடுத்து தீலிபனுக்கு காட்டுவோம் என்று நினைத்து, தவம், நான், குரு, சுபாஸ், துரை, நகுலேஸ் எல்லோரும் திட்டம் தீட்டுகிறோம். மானிப்பாய் சந்தையடியில் இருக்கும் மக்கள் வங்கியில் உள்ள காவலாளியிடம் உள்ள துப்பாக்கியை பறிப்பது என்று முடிவெடுத்தோம்.

குரு ஐயா ரெக்கி பார்த்து சொன்னார். பகல் பதினொருமணியளவில் சுபாஸ், நவம் உள் புகுந்து துப்பாக்கியை பறிப்பது இருவர் வங்கியில் நிற்கும் மக்களை உத்தியோகத்தரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்று. ஆனால் அன்று குரு ஐயா கூறியது போல் துப்பாக்கியுடன் காவலாளி இல்லை. சுவரில் மாட்டியிருந்த ஜே ஆர் படத்தை கழட்டி வீதியில் போட்டு உடைத்து வந்தோம்.

அடுத்த நாள் திலீபன் கேள்விப்பட்டு, அனைவருக்கும் அம்மன் கோவிலடியில் விக்ரர் அண்ணா உதவியுடன் எங்களிற்கு விசாரணை பாராட்டு கிடைக்கும் என்று நம்பிய எங்களிற்கு தலையில் இடி விழுந்தது. ஆளுக்கு 500 தோப்புப் கரணம். இரண்டு நாள்  நொண்டி நடந்தது தான் கண்ட மிச்சம். அப்பாடா இந்தளவில் ஆவது தப்பிவிட்டோம். இதற்கும் காரணம் திலீபனின் பொறுமை அமைதி.

பின்பு நாங்கள் குரு ஐயாவை பகிடி பண்ணுவோம். அவன் தும்புதடியோடு நின்றதை பார்த்துவிட்டு துவக்கு என்று சொல்லிவிட்டியள் என்று, இந்த பகிடிகளையும் கேட்டு திலீபன் சிரித்ததும், ஒன்றாய் இருந்து. அம்மன் கோவிலடியில் எல்லோரும் வட்டமாக சோறு கறி குழைத்து சாப்பிட்டதும் நல்லூரின் வீதியில் இருந்த உண்ணா நோன்பு மேடையில் இருந்து என் நினைவுகளாக ஓடியது.

களவோடை அம்மன் கோவில் மடைப் பள்ளியில், திலீபனுடன் ஜெகன் சந்தித்து கதைத்து, அன்றிருந்து குரு என்ற நண்பர் உதவியுடன் திலீபன் மன்னார் தளபதி விக்டர் அண்ணாவையும் ஜெகனையும் கூட்டிவந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி எப்படி இயக்குவது என்று பயிற்ச்சி கொடுக்கப்பட்டதும், நான், நவம், சுபாஸ், காவல் காத்து நின்றதும் நினைவுகளாக ஓடியது.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரும், பொலிசாரும் திரிந்த காலம். அத்துடன் பயிற்சி பெற்ற போராளிகள் இந்தியாவிலிருந்து வந்து கொண்டிருந்த காலம். ஜெகன் தான் ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்திவிட்டு, அதிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு எமது அமைப்பில் இணைவது என்ற இரகசிய இணக்கப்பாட்டை திலீபனும் ஜெகனும் ஏற்படுத்தி கொண்டனர். அதற்காக அவருக்கு விக்டர் அண்ணா மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன. புரிந்துணர்வு அடிப்படையில் திலீபன் இவற்றை மேற்கொண்டிருந்தார்.

இதே நேரம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அருகில் இந்தியாவிலிருந்து வந்த ஞானம் என்ற போராளியின் தலைமையில் ஒரு முகாம் அமைக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் வட்டுக்கோட்டையிலிருந்து கடற்படையினர் தண்ணீர் எடுத்துக் கொண்டு கோட்டைக்குச் செல்வார்கள். அதேபோல காரைநகரிலிருந்தும் கடற்படையினர் கோட்டைக்குச் செல்வார்கள். அதனால் அங்கே ஒரு கண்ணிவெடித் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஜெகன் கண்ணிவெடியைப் புதைத்து வைத்து விட்டு காவலிருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் அதிகாலையில் முகாமைச் சுற்றிய வீதிகளில் நோட்டமிடுவதற்காக இரண்டு போராளிகளை அனுப்புவது வழக்கம். ஜெகன் கண்ணிவெடி வைத்திருந்த இடத்திற்கு அருகில் இவர்கள் சென்றதும், சந்தேகமடைந்த ஜெகனின் நண்பர்கள், அவ்விடத்தில் நிற்காது அகன்று செல்லுமாறு கூறியதையடுத்து, இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஜெகனின் நண்பர்கள் அவர்களை அடித்து துரத்தி விட்டிருந்தனர். அவர்கள் முகாமிற்கு வந்து முகாம் பொறுப்பாளராக இருந்த ஞானம் என்பவரிடம் சொல்ல, அவர் துப்பாக்கியுடன் சென்று ஜெகனின் நண்பர்களை அடித்ததால் கைகலப்பு ஏற்பட்டது.

அதே சமயம் ஜெகன் ஜீப்பில் அவ்விடத்திற்கு வந்த போது, ஞானம் ஜெகனை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஜெகன் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். ஜெகன் திட்டமிட்ட தாக்குதலின் இரகசியம் கருதி சில தகவல்களை வெளியில் சொல்லாத காரணத்தினால் ஞானத்திற்கு ஜெகன் பற்றிய தகவல் தெரியவில்லை.

தங்கள் முகாமிருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தினால் தமக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று கருதியோ என்னவோ ஞானம் செய்த செயல் ஒரு துன்பியல் நடவடிக்கையாக மாறியது. அன்று தான் திலீபன் கண்கலங்கி அழுததை நான் பார்த்தேன்.

உடனே கிட்டண்ணா கோபம் கொண்டு, ஞானத்தை தண்டித்து அவரை வீட்டிற்கு அனுப்பி ஒரு சிறு பிரளயமே நடந்து விட்டது. பின்னர் ஞானம் பிறிதொரு சம்பவத்தில் சயனைட் அருந்தியதும், ஜெகனை  எங்கள் மாவீரர் பட்டியலில் இணைத்ததுடன், அவரின் வீரவணக்க சுவரொட்டிகளை ஒட்டி, ஏனைய அவரின் நண்பர்களை எமது இயக்கத்துடன் இணைத்து எம்மையும் ஜெகனின் தோழர்களையும் திலீபன் சமாதானம் செய்து வைத்ததும், அவரது நேர்மை பிறழாத அணுகுமுறைக்கு சான்றாக அமைந்தது.