உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவாலாகச் சிறிலங்காவின் நில அபகரிப்பு

99
189 Views

“மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் அரசாங்கம் காணி, காவல்துறை அதிகாரங்களையும், தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்ப்பாடுகளையும் இழக்க நேரிடும். நான் எப்போதும் 13வது திருத்தத்தை எதிர்க்கிறேன். 13வது திருத்தத்தின் மூலமாகவே மகாணசபை முறை உருவாக்கப்பட்டது”, என மாகாணசபை அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார்.

இவருடைய இக் கூற்று தமிழர்களின் காணிகளை அபகரித்தல் மூலம் தமிழர்களின் தாயகத்தைச் சிங்கள மயப்படுத்தல். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய காவல்துறை பாதுகாப்பை மட்டுப்படுத்தல் மூலம் இராணுவ ஆட்சியால் தமிழர்களின் தன்னாட்சியை இல்லாதொழித்து அடக்கி ஆளுதல். தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி ஈழத்தமிழர்களின்  தேசிய அடையாளத்தின் தொன்மை மிகு சான்றுகளை  இல்லாதொழித்தல் என்னும் முப்பெரும் ஈழத்தமிழின எதிர்ப்புக் கொள்கையினை இன்றைய சிறிலங்கா அரசாங்கம் தனது அரசாங்கத்தின் கொள்கையாக முன்னெடுக்கத் தொடங்கி விட்டதை உலகுக்குத் தெளிவாக்குகிறது.

கூடவே  இந்திய இலங்கை அனைத்துலக ஒப்பந்தத்தால் 1987இல் ஈழத்தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட்ட மிகக்குறைந்த பட்ச உரிமைகளையும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான வகையில் மீறி இந்திய மேலாதிக்கத்தைத் தாங்கள் இல்லாதொழிப்பதாகச் சிங்கள பௌத்த பேரிளவாதத்திற்கு உற்சாகம் அளிக்கும் பேச்சாகவும் அமைகிறது. இந்த அனைத்துலக சட்ட மீறல் குறித்து குரல் கொடுக்க வேண்டிய பொறுப்புள்ள நாடான இந்தியாவும் தனது தன்னலத்தை முன்னிட்டு இது குறித்துப் போதிய கவனம் செலுத்தவில்லை.

இதனால் ஈழத்தமிழர்கள் மனித உரிமைக்கெதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அனைத்துலக முறைமைகளும் தம்மைத் தட்டிக் கேட்க மாட்டா என்ற தோரணையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் இவ்வாரச் செயற்பாடாக 10.09.2020ம் திகதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரகையில் காணி அமைச்சின் காணி ஆணையாளர் திணைக்களம் “ஆவணங்கள் ஏதுமின்றி அரசகாணிகளை அபிவிருத்தி செய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்டரீதியான ஆவணம் வழங்குதலை துரிதப்படுத்தும்” முறையில் காணிக்கு உரிமைகோருமாறு விண்ணப்ங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்வழி சிங்களக் காடையர்கள் அரசபடைபலத்துணையுடன் கைப்பற்றிய தமிழர் தாயக  நிலங்களெல்லாம்  நிரந்தரமாக அந்தச் சிங்களக் காடையர்களுடையதாக மாற்றப்பட்டுச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சனநாயக ஆட்சி முறையின் அடிப்படை தகர்க்கப்படுகிறது.

வெளிப்படையாக ஈழத்தமிழரின்; நிலங்களை ஆக்கிரமிக்கும் இச்செயலானது  15.09.2020 இல் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக சனநாயகத் தினத்தையொட்டி அதன் பொதுச் செயலாளர் அன்ரோனியோ குட்டேரஸ் அவர்கள் விடுத்த எச்சரிப்பான “  உலகில் கோவிட் 19 நெருக்கடி  உருவான காலம் முதலாக இந்த அவசரநிலைமையைப் பயன்படுத்தி சனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்திச் செயற்பாட்டுக்கான “குடிமை வெளியையும்’ (Civic Space) கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையைக் காண்கிறோம். சனநாயகத்தின் வேர் ஆழமற்றதாகவும் நிறுவனப்பட்ட (Institute) கட்டுப்பாடுகளும் சரிபார்த்தல்களும் (Check and balance) பலவீனமாகவும் உள்ள இடங்களில் இது அபாயகரமானதாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் உண்மையாகவே அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள் வெளிப்படையாகத் திட்டமிட்ட முறையில் தினம் தினம் பறிக்கப்பட்டு வரும் இச் சமகால உதாரணங்கள் உலகின் மனித உரிமை சனநாயக முறைமைகளுக்குச் சவால்களாக வளர்ந்து வருகின்றன என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் வெளிப்படுத்துவதற்கு எதிர்வினையாகவே சிறிலங்காவின் பிரதமர் புலம்பெயர் தமிழர்களைக் கொழும்பில் சந்தித்து அவர்களை அச்சமின்றித் தம்முடன் இணைந்து முதலீடுகளைச் செய்யுமாறு ராஜதந்திரச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளார். இதனைக் கவனத்தில் எடுத்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்கான முறையில் தங்கள் தாயகத் தொடர்புகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள நேரமிது.

ஆசிரியர் தலையங்கம் – இலக்கு மின்னிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here