வடமகாண சபையைக் கைப்பற்ற பொது ஜன முன்னணி புதுவியூகம்; தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன?

வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற பஸில் ராஜபக்ஷ தரப்பு புதுவியூகம் வகுத்துள்ளது. இதற்காக மிகப்பெரும் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவும் கட்சி சாராத பிரபலம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவும் திட்டமிடப்படுகின்றது என பஸிலுக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. அதேநேரம் தற்போது நாட்டை ஆளும் தரப்பு, அதற்கு சார்பான கட்சிகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வாக்குகளை பெற்றன. இந்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்தியே வடக்கு மாகாண சபையைக் கைப்பற்ற பஸில் திட்டம் வகுத்துள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கொள்கை வழி அரசியலை முன்னெடுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (1,78, 574 வாக்குகள்), அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (62,966) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (43,980) ஆகியவை இணைந்து 2 இலட்சத்து 85 ஆயிரத்து 520 வாக்குகளைப் பெற்றன.

இதேபோன்று, அரசாங்கம், அதற்கு ஆதரவான கட்சிகள் கிடைத்தன. இதில், ஈ.பி.டி.பி (56,503 வாக்குகள்), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (49,373), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (39,053), முன்னாள் எம்.பி. சந்திரகுமாரின் சுயேச்சை (16,220), வரதராஜப் பெருமாளின் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (9,752) ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 901 வாக்குகளைப் பெற்றன.

எனவே, அரசாங்கத்துக்கு சார்பான கட்சிகளை ஓரணியாக்குவதன் மூலம் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்பது பஸிலின் கணக்காக உள்ளது.இதற்காக கட்சி சாராத பிரபலம் ஒருவரை முதலமைச்சர் வேட்பளாராகக் களமிறக்கவும் திட்டமிடப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலை சந்திப்பது அவற்றின் வாக்குகளைப் பிளவுபடுத்துவதுடன் பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கும் என்றும் அரசியல் அவதானிகள் எச்சரித்திருந்தனர். இதன் தாக்கம் மாகாண சபைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே தெரிகின்றது.