அரச தலைவருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டம்

சிறீலங்கா அரசு கடந்த புதன்கிழமை (2) 20 ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. சிறீலங்கா அரச தலைவருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் இந்த சட்டத்தின் மூலம் பல திணைக்களங்களின் சுயாதீனத் தன்மையை சிறீலங்கா அரசு மட்டுப்படுத்தியுள்ளது.

அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

புதிய நாடாளுமன்றம் நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு பின்னர் அரச தலைவர் அதனை கலைக்க முடியும். அமைச்சர்களின் எணிக்கையின் அளவின் மட்டுப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது. எத்தனை அமைச்சுக்களையும் அரச தலைவர் தன்வசம் வைத்திருக்க முடியும்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை அரச தலைவர் நியமிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச தலைவராக ஒருவர் தேர்தலில் நிற்பதற்கான வயது எல்லை 30 ஆக் குறைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நிதிமன்றங்களின் நீதியாளர்களின் நியமனங்களை மேற்கொள்வதற்கு அரச தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரமும் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டவும், அமர்வை நிறுத்தவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும், 10 பேர் கொண்ட அரசியல் அமைப்பு பேரவைக்கு பதிலாக 5 பேர் கொண்ட நாடாளுமன்ற பேரவை அமைப்பு, அதில் பொது மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கு இடமமில்லை. காவல்துறை ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது.