கிழக்கு தொல்பொருள் செயலணியில் செயலாற்ற நான் தயார் – வைத்தியர் முரளி

கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணிக்கு இலங்கையில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் ஆர்வம் காட்டாததன் காரணமாக தமிழர்களை நியமனம் செய்வது சவாலாக இருக்கிறது என்று அரசாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்து இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து உள்ள நிலையில் . இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

தொல்பொருளியல் துறையை நான் சாராதவனாக இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் தொல்பொருளியல் துறை சாராத மகப்பேற்றியல் நிபுணர் கபில குணவர்தன உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சமுதாய மருத்துவ நிபுணராக கடமையாற்றிவரும் எனக்கு ஒரு துறை சார் நிபுணராக செயலணியில் கடமையாற்ற முழுமையான தகுதி இருக்கிறது.

இதை விட நான் கட்சி அரசியலுக்கு அப்பால் பட்டவன் என்பதையும் 2015 யாழ் மருத்துவச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் வட மாகாண சபையினால் மறைக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து மாசடைந்த உண்மைகளை அம்பலப் படுத்தியவன் என்பதையும் அப்போது இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அமைச்சர் நன்றாக அறிவார்.

மேலும் நான் கிழக்கை சாராதவனாக இருப்பதானால் நல முரண்பாடுகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் நடுநிலையாக சிந்திக்க முடியும். நான் தொடர்ச்சியாக மருத்துவத்துக்கும் அப்பாலும் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் கிழக்கில் கூட கடந்தகாலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு துறைசார் நிபுணராக கல்குடாவில் மதுபானசாலை இயங்குவதற்கு போதுமான நீர்வளம் அங்கு காணப்படவில்லை என்று தெரிவித்து இருந்ததையும் அனைவரும் அறிவர்.

இந்தப் பின்புலத்தில் அமைச்சரின் சாதகமான முடிவையும் நியமனக் கடிதத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் என்பதை அமைச்சருக்கும் ஊடகங்களுக்கும் இந்தப் பதிவு மூலமாக வெளிப்படையாக அறிவிக்கிறேன் என்று தனது முகநூல் வழியாக தெரிவித்துள்ளார்.