20வது திருத்த சட்டம் ஜனாதிபதியின் சர்வாதிகார தன்மையினை ஓங்க வைக்கும் – சிறிநேசன்

ஜனாதிபதியின் சர்வாதிகார தன்மையினை ஓங்க வைக்கும் யாப்பு திருத்தமாகவே 20வது திருத்த சட்டம் அமையப்போகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ள சிறப்புரிமை,தங்களுக்குரிய அதிகாரம், மக்கள் ஆணை என்பவற்றினை தனியொருவராகவுள்ள ஜனாதிபதி காவுகொள்ளும் நிலையிருக்குமானால் இந்த அரசியல்யாப்பு திருத்தம் மிகவும் எதிர்க்கவேண்டிய யாப்பாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற ஒரு மாதம் கழிவதற்கு முன்பாகவே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப்போகின்றது என்கின்ற விடயம் தற்போது வெளிப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் 19வது அரசியல் யாப்பு சரத்தினை நீக்கிவிட்டு 20வது அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது. இந்த 20வது திருத்தம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். 19வது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்ககூடிய வகையிலும் ஜனநாயகத்தன்மையினை ஓரளவேணும் பேணக்கூடிய வகையில் இருந்தது.

தற்போது 20வது யாப்பு திருத்தம் என்று சொல்வது 18வது யாப்பு திருத்ததினைபோன்று அமைந்திருக்கப்போகின்றது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை உச்சப்படுத்தும் வகையில் இந்த யாப்பு திருத்தம் அமையப்போகின்றது.இது எதிர்காலத்தில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது என்பதை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, பாதுகாப்புதுறை, ஆட்சித்துறை உட்பட சகல துறைகளிலும் உள்ள அதிகாரங்களை தன்னகத்தே எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் ஜனாதிபதிக்கு அதிகாரங்களை இந்த 20வது திருத்தம் வழங்கப்போகின்றது.

19வது திருத்த சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தினை நான்கரை ஆண்டுகள் கழித்த பின்னர்தான் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தினை கலைக்ககூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் 20வது திருத்த சட்டத்தின்படி பாராளுமன்றம் ஐந்து வருட பதவிக்காலத்திற்கு தெரிவுசெய்யப்பட்டாலும் ஜனாதிபதி நினைத்தால் ஒரு வருட காலத்திற்குள் பாராளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படுகின்றது.

225பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தினை ஜனாதிபதி ஒருவருட காலத்திற்குள் வரையறுப்பதுபோன்று இந்த விடயம் அமையப்போகின்றது.இது ஜனநாயக ரீதியான பண்பாக இருக்காது.மாறாக இது எதேச்சதிகார முறையாக இருக்கமுடியும்.இது ஜனாதிபதியின் சர்வாதிகார தன்மையினை ஓங்க வைக்கும் யாப்பு திருத்தமாகவே 20வது திருத்த சட்டம் அமையப்போகின்றது.ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.மக்கள் உங்களுக்கு ஆணைதருவது ஐந்து ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இருந்து பணியாற்றுவதற்காகும்.அதனை தனிப்பட்ட தேர்தலில் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி என்பவர் ஓரு வருட காலத்திற்குள் உங்கள் பதவிக்காலத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நிலையேற்பட்டால் ஜனாதிபதியின் அதிகாரம் எவ்வளவு தூரத்திற்கு பாராளுமன்றத்தினை பாதிக்கப்போகின்றது என்பதை சிந்தித்து உணரவேண்டும்.

எதிர்க்கட்சிகள்தான் இதனை எதிர்க்கவேண்டும் என்றில்லை.ஆளும் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்குள்ள சிறப்புரிமை,தங்களுக்குரிய அதிகாரம்,மக்கள் ஆணை என்பவற்றினை தனியொருவராகவுள்ள ஜனாதிபதி காவுகொள்ளும் நிலையிருக்குமானால் இந்த அரசியல்யாப்பு திருத்தம் மிகவும் எதிர்க்கவேண்டிய யாப்பாகவே அமைகின்றது. 225பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தாலும் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கமுடியாது.ஆனால் ஒரேயொரு ஜனாதிபதி நினைத்தால் பாராளுமுன்ற உறுப்பினர் 225 பேரின் பதவிக்காலத்தினை ஒரு வருட காலத்திற்குள் வரையறுப்பதற்கான அதிகாரம் என்பது ஒரு எதேச்சதிகாரமான அதிகாரமாக இருக்கமுடியும் என்பதை மிகவும் பகுத்தறிந்து உணர்ந்துகொள்ளவேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.இல்லாதுவிட்டால் ஆப்புழுத்த குரங்குகளாக அல்லல்படவேண்டிய நிலைமையேற்படும்.

ஆட்சிகள் மாறுகின்றபோது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களது அதிகாரத்தினை பதவியினை பாதிப்பதற்கு இடமளிப்பதாக இது அமைந்துவிடும்.

பாராளுமன்றத்தினை கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஜனாதிபதிக்கு நிறைவேற்றுத்துறையில் ஏகபோக அதிகாரங்கள் இருக்கின்றது. அமைச்சரவையினை கையாளும் அதிகாரங்கள் கூட முழுமையாக ஜனாதிபதிக்கு செல்லவுள்ளது.நீதித்த்துறையினை பொறுத்தவரையில் சட்டமா அதிபர் உட்பட பல நியமனங்களை நேரடியாக ஜனாதிபதி வழங்ககூடிய நிலையுள்ளது. அதனடிப்படையில் சட்டத்துறையினை ஜனாதிபதி கட்டுப்படுத்தக்கூடியதாகவுள்ளது. நிறைவேற்றுத்துறையினை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் வழங்கப்படுகின்றது. அதேபொன்று நீதித்துறைக்கும் நேரடியாக நியமனங்களை வழங்குவதன் மூலமாக தனக்கு ஆதரவு வழங்ககூடியவர்களை வைத்திருப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

ஜனாதிபதி செயற்படுத்தும் விடயங்கள்,செயற்படுத்திய விடயங்கள் தொடர்பில் நீதித்துறை மூலம் வழக்குத்தாக்கல்செய்யமுடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளுது. நீதித்துறையினால் கட்டுப்படுத்தமுடியாதவராக ஜனாதிபதி இருக்கின்றார்.19வது திருத்ததில் ஜனாதிபதியை கட்டுப்படுத்தக்கூடிய கடிவாளம் இருந்தது.முன்னாள் ஜனாதிபதி மூன்று வருடத்தில் பாராளுமன்றத்தினை கலைத்தபோது வழக்கு தொடர்ந்து அதனை நிறுத்தமுடிந்தது.ஆனால் தற்போது கைகளைவிட்டு மேவிச்செல்வதை காணமுடிகின்றது.

ஆட்சித்துறையினை பார்க்கும்போது அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை கொண்டுவரப்பட்டிருக்கின்றது.இதுவெறும் கண்காணிக்கின்ற பேரவையாக இருக்கப்போகின்றதே தவிர உயர் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதி வழங்கும் சிபார்சுகளை செய்யும் பேரவையாக இருக்கப்போவதில்லை. சுயாதீன ஆணைக்குழுக்களில் இருக்கின்ற அதிகாரிகள்,உயர் நிர்வாகிகள் எல்லோரையும் ஜனாதிபதி நியமிக்ககூடிய நிலையிருக்கின்ற காரணத்தினால் அதன் சுயாதீனம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலையுள்ளது.

அதனைவிட ஜனாதிபதியின் வயதெல்லை 35ஆக இருந்து 30ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டைக்குடியுரிமையுள்ளவர்களும் தேர்தலில்போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால் இதெல்லாம் பொதுவான திட்டமா அல்லது ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒழுங்கமைக்கப்படுகின்ற அரசியல் திருத்த சட்டமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்.30வயதுக்கு குறைந்த ஒருவர் அவர்கள் பக்கம் உள்ளார்.அவரை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரட்டைக்குடியுரிமையுள்ளவர்களும் தங்கள் பக்கம் இருக்கின்றார்கள்,அவர்களை பாராளுமன்றம் கொண்டுவருவதற்கு அல்லது எதிர்காலத்தில் ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கான ஏற்பாடாக இது அமைந்திருக்கின்றது.

எனவே இந்த 20வது அரசியல்யாப்பு திருத்தம் என்பது பொதுவான தன்மையினை கொண்டதாகயில்லாமல் தனிப்பட்ட குறிப்பிட்ட சாராருக்கு நன்மையளிக்கும் வகையில் அமைந்திருப்பதை அவதானிக்ககூடியதாகயிருக்கின்றது.20வது அரசியல்யாப்பு திருத்தம் என்பது சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை போன்ற அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிளவான அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்ககூடிய முறையாக இருக்கின்ற காரணத்தினால் இது ஜனநாயகத்திற்கு முரணாணது, விரோதமானது, சர்வாதிகாரத்தினை ஏற்படுத்தக்கூடியது.

இந்த நாட்டுமக்கள் நல்லாட்சிக்காலத்தில் அனுபவித்துவந்த பல உரிமைகள் சுதந்திரத்தினை இழப்பதற்கான ஒரு திருத்தமாக இது அமைகின்றது.ஆளும்கட்சியில் தமிழ் பேசும் அமைச்சர்களாக இருப்பவர்கள் இதனை அலங்காரப்பதவியாக எடுத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் வழங்கும் பதவியாக எடுத்துக்கொள்ளாமல் சிறுபான்மை மக்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு நீங்கள் அரசாங்கத்துடன் போராடவேண்டிய கட்டமிருக்கின்றது.இரண்டு கைகளையும் தூக்கி நீங்கள் ஆதரவு வழங்குவீர்களானால் மிக விரைவில் உங்கள் சுயரூபங்களை மக்கள் விளங்கிக்கொள்வதற்குரிய வாய்ப்பிருக்கின்றது.ஆளும் கட்சியில் உள்ள தமிழ் பேசும் அரசியல்வாதிகள் இந்த 20வது அரசியல் யாப்பினை எதிர்க்கவேண்டும்.