செங்கொடியின் நினைவும் ஏழுதமிழர் விடுதலையும் – கவிபாஸ்கர்

184
208 Views

உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலவாதிகளை திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள், நமக்குள்ளிருக்கும் சாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்…. உண்ணாவிரதப் போராட்டத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும், விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.” என்று தமிழீழ இனப்போராட்டத்திற்கு தன்னுடலை தழலுக்கு இரையாக்கும் முன் ஓர் கடிதத்தை எழுதி பரப்புரை செய்து மடிந்தான் தழல் ஈகி முத்துக்குமார்.

அவனது மரணக்குறிப்பு, குறிப்பாக தமிழ்நாட்டு தமிழீழ அரசியலில் ஓர் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்தது.

தமிழீழத்தில் தாய்த்தமிழ் உறவுகள் கொத்துக் கொத்தாக கொலையுண்ட தருணம், பன்னாட்டுச் சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் தமிழீழ உணர்வாளர்கள் 20இற்கும் மேற்பட்டோர் தமது உடலை தீக்கு இரையாக்கி தொப்புள் கொடி தமிழர்களுக்காக உயிரீகம் செய்தனர்.

இந்நிலையில்தான் முத்துக்குமாரின் மரணசாசனம் பலரை உலுக்கி எடுத்த அதே வேளையில், முத்துக்குமார் நெருப்பு வழியில் தமது தேகத்தை ஆயுதமாக்கி நெருப்பில் இறங்கினாள் காஞ்சி செங்கொடி!

“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்” -இப்படிக்கு தோழர் செங்கொடி என்று முத்துக்குமாரை போல் கடிதம் எழுதி வைத்துவிட்டு நீதிமன்றம் மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாண்டாள்! அவள் நெருப்பில் வெந்ததின் விளைவாகத்தான் பிறகு மூன்று தமிழர் தூக்கு தண்டனை நீக்கப்பட்டதென்பது வரலாறு!

ஒரு தாய் தன் மகனின் உயிர்காக்க போராடுவதில் எந்த வித ஆச்சரியமும் இல்லைதான். ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இருபத்தியொரு வயது இளம் பெண், மூன்று பேரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தன் உயிரை தீக்கு இரையாக கொடுத்த அதிசயம் இந்தத் தமிழ் மண்ணில் தமிழர்களுக்காக நடந்தேறியது.

2011 ஓகஸ்ட் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தன்னை தீக்கிரையாக்கிக் கொண்டார் செங்கொடி. அவர் பழங்குடியினர் சமூகத்தை சார்ந்தவர். பழங்குடியினர் எப்போதும் தற்கொலை என்பதை அறியாதவர்கள். இயற்கையோடு இயைந்து வாழப் பழகியவர்கள். அப்படிப்பட்ட தோழர் செங்கொடி மனத்தை இரும்பாக்கி தமது தமிழின இலட்சியத்திற்காக தன்னுயிரை கொடையாக கொடுத்தார்.

தமிழ்ச் சமூகம் எப்போதும் தம் உயிரை ஆயுதமாக்கிப் போராடும் என்பது வரலாறு. ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைக்கு களமாடிய வீர்த்தமிழிச்சி குயிலி முதன் முதலில் தன்னுடைய உடலில்  நெருப்பைக் கட்டிக் கொண்டு ஆங்கிலேய பீரங்கிக் கிடங்குகளை தகர்த்தார். அந்த வரலாற்று வழியில் தமிழீழத்தில் தலைவர் பெண் கரும்புலிகளை உருவாக்கி தன் உடலை நெருப்பாக்கி எதிரிகளை எரிக்க கரும்புலிப் படை அமைத்து வழிகாட்டினார். அந்த வழியில் வரலாற்று வழித்தடங்களை படித்தவர்கள்தான் தோழர் முத்துக்குமாரும், காஞ்சி செங்கொடியும் என்பது நமக்கு உணர்த்துகிறது!

தோழர் செங்கொடி திடீரென போராட வந்தவள் இல்லை. தமிழீழத்திற்காகவும் – தமிழக உரிமைகளுக்காகவும் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்தவர். காஞ்சி மக்கள் மன்றம் என்ற அறப்போராட்ட அமைப்பு அவளை அரணாக காத்து நின்றது. தோழர் செங்கொடி பழங்குடியின இருளர்கள் உள்பட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற களப் போராளி. இசை, நாட்டியம், பாடல் என பன்முக திறமையின் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவள்!

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த செங்கொடி, லெனின், சேகுவாரா, பிரபாகரன், பெரியார்  அம்பேத்கர் உள்பட பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தும் பல்வேறு நூல்களை படித்தும் அதன்படியே தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

தூக்குக்கயிறை தூக்கிலிட தீக்குளித்தவள் செங்கொடி. அந்த 21 வயதான செங்கொடியின் தற்கொலைக்குப் பின்னால் இருந்தது பலர் நினைத்ததுபோல் வெறும் கோழைத்தனம் அல்ல. அநீதிக்கு எதிராய் கொண்ட பெருங்கோபமும், மூன்று நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற இலட்சியமும் ஆகும்!

கயிறு வாங்கி மேடை போட்டு நாள் குறித்து உலகிற்கே அறிவித்துத் மூன்று அப்பாவித் தமிழர்களை தூக்குத் தண்டனை என்ற பெயரை பயன்படுத்தி பச்சைப் படுகொலை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது  அன்றைய இந்திய அரசு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்து, கொடூரமாக சித்திரவதை செய்து உளவுத்துறையினரே எழுதிக் கொண்ட ஒன்றை இம்மூவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லி, வேறு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் நீதியின் பெயரால் ஒரு அநீதி வழங்கப்பட்டு, மூன்று தமிழர்கள் 25 ஆண்டுகளை கடந்தும் தூக்குக் கயிற்றுக்குக் கீழே தனிமைச் சிறைக் கொட்டடியில் தங்கள் வாழ்நாளைக் கழித்த பின்னும் குரல்வளையில் கயிறை போட நாள் பார்த்துக் கொண்டிருந்தது இந்திய ஏகாதிபத்திய அரசு. தமிழர் ஆரிய பகை அரசான இந்திய அரசு பேரினவாத சிங்கள அரசுடன் கைகோத்து 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்த தனது இரத்த வெறி அடங்காமல் முருகன், சாந்தன், பேரறிவாளனைத் தூக்கிலிட நாள் குறித்தது.

அந்த தமிழின பகை வெறியை நெருப்பால் பொசுக்கி கயிற்றை எரித்தாள் தோழர் செங்கொடி!

தனது போர்க்குணமிக்க போராட்ட வாழ்க்கையை ஆண்டாண்டு காலமாய்க் கொத்தடிமைகளாய் இருக்கும் இருளர் மக்களை மீட்டெடுத்து, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, பெண்கள் விடுதலைக்கான போராட்டத்திலும் தம்மை இணைத்து தமிழர்களை விடுதலைப் போராட்டத்திற்கு  அறைகூவி அழைத்த செங்கொடி தமிழக மண்ணில் தன்னையே விதையாக விழுத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.

முத்துக்குமார் – காஞ்சி செங்கொடியின் உயிர்த்தியாகம் நமக்கு இலட்சியத்தை, ஈகத்தை நெஞ்சில் சுமக்க வைத்திருக்கிறது. அவர்களின் மரண வழியை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எதற்காக மரணமடைந்தார்கள் என்ற கொள்கையை நமக்குள் ஏந்திக் கொள்ள வேண்டும். அந்த கொள்கை இலட்சியம் வெல்லும் வரை நாம் போராட வேண்டும். மூன்று தமிழர் உயிரைக்காக்க தீக்குளித்து வென்றாள் செங்கொடி.

25 ஆண்டுகள் கடந்தும்  சிறைக் கொட்டடியில் தவிக்கும் ஏழு தமிழர்களின் விடுதலையை  சட்டவழிகள் திறந்து இருந்தும் திறக்க மறுக்கிறது இந்திய அரசு. காரணம் தமிழினப்பகை தனது இனப்பகையை அப்பட்டமாக நுண்ணரசியலாக வெளிப்படுத்துகிறது. நாம் விழித்துக் கொள்ள வேண்டும். தொடர் மக்கள், திரள் போராட்டங்கள் வழியாக மீண்டும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நூற்றாண்டு காலமாய் இன உரிமைக்காக களமாடியது; களமாடுகிறது தமிழ்ச் சமூகம். அதனால்தான் தமிழீழ ‘மாவீரர்கள்’ திலீபன், முத்துக்குமார் வரிசையில் தோழர் செங்கொடி தமது உயிரை ஆயுதமாக ஏந்தி, மக்களை ஒருங்கிணைத்தாள்.

அறப்போராளிகள் எப்படி சாவுக்கு அஞ்சக் கூடாதோ அது போலவே சாவை தேடியும் போகக்கூடாது. நாம் நமது இலட்சியத்திற்காக இறுதிவரை போராட வேண்டும். தோழர் செங்கொடி நமக்கு தந்துவிட்டு சென்ற இலட்சியத்தை கைவிடாது காக்க வேண்டும். அப்பாவி ஏழுதமிழர்களின் விடுதலைக்கு மீண்டும் நாம் புதிய வடிவத்தில் மக்கள் திரள் போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். இதுவே செங்கொடியின் நினைவு நாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியாகும்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here